

தமிழகத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் நியமனம் முழுக்க தகுதி மற்றும் வெளிப்படைத்தன்மை அடிப்படையில் நடைபெறுகிறது என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நியமனத்திற்காக எந்த வகை கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. பணம் அல்லது ஆதாயம் மூலம் தலையீடு செய்ய முயலும் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணி நியமனம் முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் தகுதி அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
விண்ணப்பதாரர்கள், செவிலியர் பணி தேர்வு மற்றும் பணி நியமனத்திற்காக எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்பதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், பணம் அல்லது ஏதேனும் ஆதாயத்தைப் பெற்றுக்கொண்டு, நியமன செயல்முறையில் தலையீடு செய்ய முடியும் எனக் கூறும் தனிநபர்கள் அல்லது இடைத்தரகர்களை நம்பவோ, அவர்களுடன் தொடர்பு கொள்ளவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதுபோன்ற சம்பவங்கள் ஏதேனும் கவனத்திற்கு வந்தால், 8754448477 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளை மட்டுமே நம்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைவருக்கும் நியாயமான மற்றும் வெளிப்படையான நியமன செயல்முறை நடைபெறுவதற்கு அனைவரின் ஒத்துழைப்பு தேவை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.