தொகுதி மறுவரையறை விவகாரம்: பாஜக பொறியில் திமுக சிக்கிவிடக்கூடாது- கி.வீரமணி

கர்நாடகா, ஆந்திரா, கேரளா எல்லாம் என்ன நிலைப்பாடோ அதுதான் நமது நிலைப்பாடாக இருக்க வேண்டும்.
முக ஸ்டாலின்- கி.வீரமணி
Published on: 
Summary

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தி.மு.க. தனது முந்தைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். பாஜக வலுக்கட்டாய முயற்சிகளால் தென்மாநிலங்களின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது என்றும், தி.மு.க. சறுக்கினால் எதிரிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தி.மு.க. ஆதரவு தெரிவித்தது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பெரிதும் கவலை

2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன் திட்டமிட்டே கொண்டு வந்த தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்தை நிறைவேற்றவிடாமல், மாநிலங்களின் – குறிப்பாக தென் மாநிலங்களின் உரிமையைப் பறித்து, குரலற்றவர்களாக்கும் சூழ்ச்சி வியூகம் அமைத்ததைத் தோற்கடித்தப் பெருமை தி.மு.க.வின் வரலாற்றுப் பெருமையாகி, இந்தியா முழுவதும் பரவி, வரலாறு படைத்தது.

தற்போது ஏதோ ‘தி.மு.க. அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறி, புதிய சில மாய்மால ஜாலத் திட்டங்கள் – சதவிகித கணக்குக் காட்டி வஞ்சிக்கும், தேன் கலந்த விஷ உருண்டையை ஏற்றுவிட்டது; சமரசம் செய்துகொண்டது’ என்ற பரவலானப் பிரசாரம், ஊடகம், சமூக வலைதளங்கள், தி.மு.க.வை அழிக்க விரும்பும் அரசியல் கட்சிகளிடையே வெகுவேகமாகப் பரவி வருவது குறித்து, தாய்க்கழகமான திராவிடர் கழகம் பெரிதும் கவலை கொள்கிறது!

அது உண்மையாக இருக்காது; உண்மையாக இருக்கக் கூடாது என்பதை உரிமையுடன் நம்புகிறோம்.

எனவே, தி.மு.க. தலைமைக்கு, அதன் காவல் அரணான திராவிடர் கழகம் விடுக்கும் உரிமை வேண்டுகோள்!

எதிரிகளுக்கு வாய்ப்பு

அருள்கூர்ந்து, கடந்த காலத்தில், அதன் நிலைப்பாட்டினை – எவ்வளவு வாக்குறுதிகளை பாஜக, அமித்ஷாக்கள் தந்தாலும், அதனை நம்பி, சதவிகித கணக்குத் தேனை உண்மையென நம்பி, வாக்காளர்களுக்கு இந்த கட்டத்தில், என்ன விளக்கம், சமாதானம் சொன்னாலும், மக்கள் மன்றத்தில் தி.மு.க.விற்குக் கெட்ட பெயரும், தீராப் பழியும் தான் ஏற்படும் என்பது திராவிடர் கழகத்தின் கருத்து மட்டுமல்ல; அதன் பாதுகாப்பில் அக்கறை கொண்ட பல பெருமக்கள் – அறிவுசார் பிரமுகர்கள் நம்மிடம் இடையறாது கடந்த இரண்டு நாள்களாகத் தொடர்பு கொண்டு, வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கொடுத்த கதையாகி விடக் கூடாது; அப்படி ஒரு நிலை வரக்கூடாது என்பதை தி.மு.க.விடம் வற்புறுத்திக் கூறுங்கள் என்றும் அன்புக் கட்டளையிட்டார்கள்.

எனவே, முந்தைய சட்டமன்றத் தீர்மானம், தொகுதி மறுவரையறை பற்றி 25 ஆண்டுகளுக்கு தற்போதைய முறையே தொடரும் என்பதில் உறுதியுடன் இருக்கவேண்டும்.

கர்நாடகா, ஆந்திரா, கேரளா எல்லாம் என்ன நிலைப்பாடோ அதுதான் நமது நிலைப்பாடாக இருக்க வேண்டும். தென்மாநிலங்களை பாதிக்கும் வகையில், எந்த முயற்சிக்கும் இடந்தரக்கூடாது. இந்திய அளவில் நமது குரல் நசுக்கப்படக் கூடாது.

அதிக இடங்கள், விகிதாச்சாரக் கணக்கு என்ற பா.ஜ.க. பொறியில் (Trap) தி.மு.க. சிக்கிவிட்டால், அது தி.மு.க.வை வீழ்த்திடத் துடிக்கும் இன, அரசியல் எதிரிகளுக்குச் சரியான வாய்ப்புத் தந்ததாக ஆகிவிடக் கூடும்.

தமிழ்நாட்டில் உள்ள சூழ்நிலையில், வெண்ணெய் திரண்டு வரும்போது, தாழியை உடைத்தது போல் ஆகிவிடும் என்ற பெருங்கவலையால், இதனை அவசர வேண்டுகோளாக, உரிமை விழைவாக தி.மு.க.வுக்கு விடுக்கிறோம். உறவோடும், உரிமையோடும் இதனைச் சுட்டுவது நமது கசப்பான கடமையாகும்.

சிந்திக்கவும்,

சிந்திக்கவும்!

சறுக்கல் பெரிய விபத்தாகிவிடக் கூடும் என்பதே நமது கவலை! என்று கூறியுள்ளார்.

X