பூந்தமல்லி-போரூர் மெட்ரோ ரெயில் சேவை தொடங்குவதில் தாமதம்: திறப்பு விழாவுக்கு காத்திருப்பதாக பொதுமக்கள் ஆதங்கம்

பராமரிப்பு நிறுத்தப்பட்டால் ரெயில் நிலையங்கள் சீர்குலைந்து விடும் என்று மெட்ரோ ரெயில் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ஏப்ரல் மாதத்தில் இருந்து ஒப்பந்ததாரர் நிலையங்களை பராமரித்து வருகிறார்.
கோப்புப்படம்
Published on

சென்னை மெட்ரோ ரெயில் 2-வது கட்ட திட்ட பணியில் பூந்தமல்லி- போரூர் இடையே யான வழித்தடம் பொதுமக்கள் சேவைக்கு தயாராக உள்ளது.

தயார் நிலை

இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் இயக்குவதற்கு பாதுகாப்பு ஆணையரிடம் இருந்து இறுதி அனுமதி பெற்று ஒரு மாதம் கடந்துவிட்டது. ஆனாலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் திறக்கப்படவில்லை.

திறப்பு விழா விழாவுக்காக காத்திருக்கும் இந்த வழித்தடத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் நிலையங்களை பராமரித்து வருகிறார்கள். மேலும் பல்வேறு தேவைகளுக்காக ஒவ்வொரு நாளும் மின்சாரம் செலவிடப்படுகிறது. வரி செலுத்தும் மக்களின் கோடிக்கணக்கான பணம் ஒரு தயாரான சொத்தை பராமரிப்பு செய்ய தேவைப்படுவதை சுட்டிக் காட்டும் பயணிகள் ஏன் இந்த வழித்தடம் இன்னும் திறக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர்.

பராமரிப்பு செலவு

பூந்தமல்லியில் இருந்து போரூர் மற்றும் வடபழனி நிலையம் வரையிலான மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிக்க சுமார் 350 முதல் 400 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

பல்வேறு அறைகளில் ஏ.சி. பயன்படுத்தப்படுகிறது மற்றும் தினமும் மாலை விளக்குகள் எரிகின்றன. இது கடந்த 3 மாதமாக நடந்து வருகிறது. இது ஒரு அவசியமான ஒன்று என்றாலும் திறப்பு விழாவுக்கு ஒரு நாள் முன்னதாக நிலை யங்களை திறந்து மீண்டும் செயல்பட வைக்க இயலாது.

பராமரிப்பு நிறுத்தப்பட்டால் ரெயில் நிலையங்கள் சீர்குலைந்து விடும் என்று மெட்ரோ ரெயில் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ஏப்ரல் மாதத்தில் இருந்து ஒப்பந்ததாரர் நிலையங்களை பராமரித்து வருகிறார். பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராத நிலையில் இந்த சேவைகளுக்காக அந்த நிறுவனத்திற்கு விரைவில் சில கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் மற்றொரு தரப்பில் கூறப்படுகிறது.

ஐயப்பன்தாங்கல் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறும் போது, வரி செலுத்துவோரின் பணம் வீணாகிறது. ஆரம்பத்தில் கட்டுமானம் இன்னும் முடியவில்லை என்று கூறி அதிகாரிகள் காலக்கெடுவை நீட்டித்துக் கொண்டே சென்றனர். இப்போது நிலையங்கள் தயாராக உள்ளன. ஆனால் இன்னும் திறக்கப்படவில்லை. இறுதியில் பொது போக்குவரத்து வசதி கிடைக்காமல் பாதிக்கப்படுவது பயணிகள் தான் என்றார்.

இந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்குவதற்கு தயாராக இருப்பதாக மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அனைத்து விவரங்களும் அனுப்பப்பட்டு விட்டதாகவும் விரைவில் திறப்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்ப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com