

தமிழ்க்கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடாக திகழ்வது திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவில். மலை மீது அமைந்துள்ள குடைவரை கோவிலான இங்கு தெய்வானையுடன் முருகன் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
திருவண்ணாமலைக்கு அடுத்ததாக இங்கு நடைபெறும் திருக்கார்த்திகை திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதற்கிடையே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. இதுதொடர்பாக ராம ரவிக்குமார் மற்றும் இந்து அமைப்பினர் மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், கடந்த ஆண்டு தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். அதே தீர்ப்பை 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வும் உறுதி செய்தது.
இதனை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. கடந்த 20-ந்தேதி அதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட அரவிந்த் குமார், விபுன் பஞ்சோலி அமர்வு, மதுரை ஐகோர்ட்டு நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், இந்த ஆண்டு மட்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று ஆணை பிறப்பித்தது.
ஆனால் அதனை நிறைவேற்றாமல் கடந்த 24-ந்தேதி வழக்கமான உச்சிப் பிள்ளையார் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இதுதொடர்பாக நேற்று விசாரணைக்கு வந்த அவமதிப்பு வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்தனர். கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாததற்கு கடும் கண்டனங்கள் தெரிவித்த அவர்கள் கோவில் அறங்காவலர் குழுவை தற்காலிகமாக கலைத்து உத்தரவிட்டனர். கோவில் பொறுப்புகளை கவனிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோரை நியமித்ததுடன், இன்றே (28-ந்தேதி) திருப்பரங்குன்றம் மலை மேல் அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனை வரவேற்ற முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதையடுத்து தீபத்தூணில் இன்று மாலை தீபம் ஏற்றுவதற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக பாதுகாப்பு பணிகளுக்காக சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து 750 சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் திருப்பரங்குன்றம் வந்துள்ளனர். அவர்கள் மலையை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுடன் உள்ளூர் போலீசாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில் 10-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப். வீரர்கள் மலை மீது அமைந்துள்ள தீபத்தூண் பகுதியில் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதேபோல் தீபத்தூண் மலை உச்சியில் அமைந்துள்ளதால் அதனை சுற்றி பாதுகாப்பு காரணங்களுக்காக தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தனர்.
தொடர்ந்து அவர்கள் மதுரை பெருங்குடி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் ஆலோசனை நடத்தினர். இதில் கலெக்டர், ஸ்தானிக பட்டர்கள், சி.ஆர்.பி.எப். படையின் ஐ.ஜி. விக்ரம் அதிகாரி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 20 நிமிடங்கள் நடந்தது.
பின்னர் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்த அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலை நிர்வகிக்கும் அனைத்து பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட அவர்கள் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல் இன்று மாலை 5 மணிக்கு, மலை மேல் அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுகிறது. இதனை ஓய்வு பெற்ற நீதிபதிகள் உறுதி செய்தனர். நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக பங்கேற்பார்கள் என்பதால் அதுதொடர்பான முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் பழைய படிக்கட்டு பாதை வழியாக மலையேறி சென்றனர். வழியில் உள்ள பழனி ஆண்டவர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில்களில் தரிசனம் செய்ததுடன், தீபத்தூண் பகுதியையும் ஆய்வு செய்தனர்.
இதற்கிடையே பழமையான கல் தூணில் தீபம் ஏற்றுவதற்கு வசதியாக 4 புறமும் சவுக்கு மரக்கட்டைகள், பலகைகளை கொண்டு படியுடன் கூடிய மேடை போன்ற பிரமாண்ட அமைப்பு உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறது. மலை மேல் செல்லும் பழைய படிக்கட்டு பாதை முழுவதும் பக்தர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. தற்போது தொடர்ந்து எரிந்து வரும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தையும் பார்வையிட்ட ஓய்வு பெற்ற நீதிபதிகள் அதிலிருந்து தீபத்தூணுக்கு தீபம் எடுத்துச் செல்லும் நடைமுறைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
தீபத்தூணில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பார்வையிட்ட ஓய்வு பெற்ற நீதிபதிகள் இந்துக்கள், இஸ்லாமியர்கள் எந்தவித சிரமமும், அச்சமும் இன்றி வழிபாடு நடத்துவற்கான வழிகளை தொய்வின்றி மேற்கொள்ள உத்தரவிட்டனர்.
அத்துடன் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு எது போன்ற கொப்பரை தயார் செய்யப்படுகிறது என்று கோவில் நிர்வகத்தினரிடம் கேட்டறிந்து அதற்கான பணிகளை விரைவுப்படுத்த உத்தரவிட்டனர். அப்போது உடனடி ஏற்பாடாக 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 மண் பானைகளில் எண்ணெய், நெய் ஊற்றி தீபம் ஏற்ற முடிவு செய்யப்பட்டது.
அதாவது தீபத்தூணை சுற்றி கட்டப்பட்டுள்ள கட்டைகளின் மேல் பகுதியில் பலகைகளை அமைத்து, அதன் மீது களிமண் குழைத்து பூசப்பட்டது. அதன் மேல் 3 மண் பானைகளை வைத்து உச்சிப்பிள்ளையார் தீப மண்டபத்தில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு மகா தீபம் ஏற்றப்படுகிறது. முன்னதாக கோவில் வளாகத்தில் வைத்து அந்த மண் பானைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றி வைக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், தயார் நிலையில் 8 ஆம்புலன்சுகள், நடமாடும் மருத்துவக்குழுவினர் உள்ளிட்ட வசதிகள் செய்து தர உத்தரவிடப்பட்டது. மேலும், கர்ப்பணிகள், வயதானர்கள், நோய்வாய் பட்டவர்கள், குழந்தைகள் மலை மது ஏறி வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி இன்று காலை முதல் திருப்பரங்குன்றம் மலை முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் மகா தீபம் ஏற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பூஜை பொருட்கள் அனைத்தும் தீபத்தூண் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
87 ஆண்டுகளுக்கு முன்னர் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று மாலை தீபம் ஒளிரப்போகிறது.
அந்த தீப ஒளியை கண்ணார காண, தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் திரண்டு வருகின்றனர். தற்போது சபரிமலை சீசன் என்பதால் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது. இதற்கிடையே இன்று மாலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை பார்க்க நேற்று வருகை தந்த சபரிமலை பக்தர்கள் திருப்பரங்குன்றத்திலேயே தங்கிவிட்டனர்.
அதேபோல் இன்று அதிகாலை கோவில் நடை திறக்கும் முன்பே ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்தனர். கோவில் திறக்கப்பட்டதும் அவர்கள் அரோகரா கோஷத்துடன் சுப்பிரமணியசாமியை வழிபட்டனர். மேலும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை பார்க்க வெளியூர்களில் இருந்து வருகை தந்த பக்தர்களால் மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம் பக்தர்கள் கூட்டத்தால் திக்குமுக்காடியது.
குறிப்பாக சென்னை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் என அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள், வேன்கள், கார்களில் பக்தர்கள் திருப்பரங்குன்றம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது அவர்கள் கூறுகையில், “தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு சொன்னவுடனேயே நேற்று இரவே புறப்பட்டு விட்டோம்” என்று பக்தர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சியால் திருப்பரங்குன்றம் கோவில் வீதிகள் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. கோவில் முன்பு பூக்கடைகள், பழக்கடைகள், விளக்கு கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பெண்கள் கையில் விளக்குடன், ஆண்கள் காவி வேட்டியுடன் கோவிலை நோக்கி நடந்து வருகின்றனர்.
“இன்று மாலை தீபம் ஏற்றும்போது நாங்களும் மலையில் விளக்கேற்றுவோம்” என்று பக்தர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, தர்காவில் இருந்து 50 மீட்டர் தொலைவில் அனைத்து பக்தர்களும் விளக்கேற்றலாம் என்பதால், பக்தர்கள் தங்களுடன் விளக்கு, எண்ணெய், திரி கொண்டு வந்துள்ளனர். அவர்கள் மாலையில் மலையேறி சென்று தீபமேற்ற தயாராகி வருகிறார்கள்.