

அக்வான் புயல் கரையை கடந்து முழுவதுமாக விலகி சென்றதும் கிழக்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக 23-ந் தேதி முதல் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
வங்கக்கடலில் உருவான அக்வான் புயல் தமிழகத்தை விட்டு விலகி ஆந்திரா மற்றும் ஒடிசா நோக்கி செல்கிறது.
மேற்கு மத்திய வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த அக்வான் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து இன்று காலை 5.30 மணிக்கு அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது.
ஆந்திர மாநிலம் நர்சபூரிலிருந்து சுமார் 440 கி.மீ. கிழக்கு தென்கிழக்கிலும் கலங்கப்பட்டணத்தில் இருந்து 440 கி.மீ. தெற்கு தென்கிழக்கிலும், 580 கி.மீ. கிழக்கு-வடகிழக்கிலும் சென்னை மற்றும் கோபால்பூர் பகுதியில் இருந்து 530 கி.மீ. தெற்கிலும் பூரி பகுதியில் இருந்து 590 கி.மீ. தெற்கிலும் இது மையம் கொண்டுள்ளது.
இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து கோபால் பூருக்கு கிழக்கே நர்சபூர் மற்றும் பூரிக்கு இடையே உள்ள வடக்கு ஆந்திரா மற்றும் ஏனாம், தெற்கு ஒடிசா கடற்கரையை நாளை 20-ந்தேதி நண்பகல் கடக்க வாய்ப்பு உள்ளது.
அப்போது காற்றின் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 முதல் 100 கி.மீ. ஆகவும் சில நேரங்களில் 110 கி.மீ. வரையும் இருக்கக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்வான் புயல் ஆந்திரா, ஒடிசா நோக்கி செல்வதால் தமிழகத்தில் 22-ந் தேதி வரை வறண்ட வானிலை காணப்படும்.
அதன் பின்னர் தமிழக கடலோரப் பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு மீண்டும் தொடங்குகிறது. இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் துரை கூறியதாவது:-
புயல் கரையை கடந்து முழுவதுமாக விலகி சென்றதும் கிழக்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக 23-ந் தேதி முதல் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் பரவலாக மிதமானது முதல் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
இந்த மாதம் இறுதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய கூடும். அதன் பின்னர் டிசம்பர் முதல் வாரத்தில் தெற்கு அல்லது தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அது புயலாக உருவாகுமா என்பது பற்றி இப்போது கணிக்க இயலாது.
இவ்வாறு அவர் கூறினார்.