

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாலகிருஷ்ணன் தானாக உயிரை மாய்த்துக் கொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படும் நிலையில், இறப்பிற்கான உண்மையான காரணத்தை கூறவேண்டும், இதற்கு பொறுப்பான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;
“மதுரை அருகேயுள்ள செக்கானூரணி காவல்நிலையத்தின் கழிவறையில் தேனியைச் சார்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் என்பவர் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார் என்பது அதிர்ச்சியளிக்கிறது.
இதன் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிய வேண்டும். குற்றவாளிகள் தப்பிக்க இடமளிக்காமல் விரைந்து சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியிருப்பது வரவேற்கதக்கது. தொடர்புடையவர்களை இடைநீக்கம் செய்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.
எனினும், காவல் மரணங்கள் அரசின் மீதான நம்பிக்கையைப் பாழ்படுத்தும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், அரசுவேலை வாய்ப்பும் வழங்கிட அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.