அரசு வழக்கறிஞர் நியமன ஊழல் - பல கோடி ரூபாய் Party Fund வாங்கிய த.வெ.க.? DVAC விசாரிக்குமா? - ஆர்.எஸ். பாரதி கேள்வி!

கள்வன் கையில் வீட்டு சாவியை கொடுத்த கதையாய் தற்போது தமிழ்நாடு தவெக கையில் மாட்டியுள்ளது.
அரசு வழக்கறிஞர் நியமன ஊழல் - பல கோடி ரூபாய் Party Fund வாங்கிய த.வெ.க.?  DVAC விசாரிக்குமா? - ஆர்.எஸ். பாரதி கேள்வி!
Published on: 

அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், தவெக அரசை கடுமையாக சாடியுள்ளார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

தவெக முகத்திரை கிழிந்தது

ஊழலை ஒழிக்கும் உத்தம ஆட்சி போல வேடம் போட்ட தவெக அரசின் முகத்திரயை கிழித்து தொங்கவிட்டுள்ளது நீதிமன்றம். ஆட்சிக்கு வந்தவுடனே அரசு வழக்கறிஞர் நியமனத்தில் கட்சி நிதி திரட்ட தொடங்கிவிட்டது தவெக அரசு என பல புகார்கள் எழுந்தன.

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் 5 லட்சம் முதல் 30 லட்சம் வரை வசூலித்ததாக த.வெ.க.வை சேர்ந்த வழக்கறிஞர் ஞானசுந்தரி என்பவரே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த ஊழல் தொடர்பாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க வேண்டும் என திமுக துணை அமைப்புச் செயலாளர் ப. தாயகம் கவி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார்.

ஆனால் ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்கள் செய்தது என்ன? புகார் அளித்த அந்த வழக்கறிஞரை கட்சியை விட்டு நீக்கிவிட்டு வழக்கை மூடி மறைக்க பார்த்தனர்.

சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனங்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரை லஞ்ச பேரம் நடத்திய தவெக நிர்வாகி அனீஸ் என்பவரது அதிர்ச்சி ஆடியோ வெளியானது. அது தொடர்பாக ஜெகன் ராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தவெக அரசை நன்றாய் வெளுத்துள்ளது.

புகாரை விசாரிக்காத லஞ்ச ஒழிப்புத்துறை

"லஞ்சம் கொடுத்து வழக்கறிஞர்களாக வர வேண்டுமா?" என்றும் "இவர்கள் நாட்டை காப்பாற்றுவார்களா அல்லது சட்டத்தைப் பாதுகாப்பார்களா?" என்று கேள்வி எழுப்பி உடனடியாக இப்புகார் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

அதோடு, “அரசு வழக்கறிஞர் நியமன ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு முன்கூட்டியே புகார் அனுப்பப்பட்டும், அவர்கள் ஏன் இன்னும் விசாரணையைத் தொடங்கவில்லை? புகார் வந்தால் விசாரிக்க மாட்டீர்களா?

லஞ்சம் தொடர்பான ஆடியோ ஆதாரங்கள் இருந்தும் ஏன் இன்னும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவில்லை?” என்றெல்லாம் லஞ்ச ஒழிப்புத் துறையின் மந்தமான செயல்பாட்டை நீதிமன்றம் நேரடியாகச் சாடியிருக்கிறது.

ஊழலை மூடி மறைக்க முயன்ற விஜய் சர்க்காருக்கு உயர்நீதிமன்றம் சவுக்கடி கொடுத்துள்ளது.

அமைச்சர் வீட்டில் சோதனை நடக்குமா?

இந்த அரசு வழக்கறிஞர் நியமன ஊழல் மூலம் பல கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டதாக செய்திகள் வருகின்றன. இந்த பல கோடி ரூபாய், தவெக கட்சி நிதிக்கு வசூலிக்கபட்டதா? அதுபற்றி விசாரிக்குமா லஞ்ச ஒழிப்புத்துறை. இதற்கு பொறுப்பான சட்டத்துறை அமைச்சர் வீட்டில் சோதனை செய்யுமா லஞ்ச ஒழிப்பு துறை?

தூயசக்தி என கொடுத்து வந்த பில்டப்பை காப்பாற்ற லஞ்ச ஒழிப்புத் துறையை தவெகவின் கிளை அமைப்பாக பயன்படுத்தி வந்தனர். ஆனால் இன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தூய சக்தியின் லட்சணத்தை தோலுரித்து காட்டியிருக்கிறது. இவர்கள் தூய சக்தியல்ல, தவெக ஒரு திருட்டு சக்தி என்பது வெளிப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் நிர்மல்குமார் தேவையின்றி Take Diversion அரசியல் செய்தது எல்லாம் இந்த மெகா ஊழலை மறைக்கத்தானா? எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் அவதூறுகளை அள்ளிக்கொட்டி மக்களை மடைமாற்றும் அமைச்சர் நிர்மல் குமாரிடம் நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் உண்டா?

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்குமா?

உத்தமர் வேடம் போட்ட விஜய் சார் எங்கே போனார்? ஏன் அவர் அரசு வழக்கறிஞர் நியமன ஊழலை பற்றி புகார் வந்தவுடன் விசாரிக்கவில்லை? திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரை இனியாவது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்குமா? இல்லை அதற்கும் நீதிமன்றம் உத்தரவிடும் வரை காத்திருக்க போகிறீர்களா?

மேசையில் கோப்பு உள்ளது என கதை விட்டீர்களே! ஆனால் உண்மையில் நீதிமன்றத்தின் மேசையில் தான் தவெக வினர் செய்துள்ள ஊழல் கோப்புகள் உள்ளன. அதில் ஒன்றை நீதிமன்றம் தற்போது திறக்க செய்துள்ளது. விரைவிலே தவெக அரசின் ஊழல்கள் ஒவ்வொன்றாய் வெளிவரும்.

கள்வன் கையில் வீட்டு சாவியை கொடுத்த கதையாய் தற்போது தமிழ்நாடு தவெக கையில் மாட்டியுள்ளது. விரைவில் இந்த அயோக்கிய கூட்டத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com