

சென்னை மாநகராட்சியின் வளர்ச்சிக்கு போதுமான நிதியை த.வெ.க. அரசு ஒதுக்கவில்லை என்று தி.மு.க. குற்றம்சாட்டி வருகிறது.
எல் நினோ தீவிரம் மற்றும் வடகிழக்கு பருவமழை அபாயங்களை அரசு கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்துவதாகவும், மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகளின் மக்கள் நலப் பணிகளை முடக்குவதாகவும் தி.மு.க. சார்பில் கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
த.வெ.க. அரசின் இந்த நிர்வாக சீர்கேட்டை கண்டித்து சென்னையில் இன்று 2 இடங்களில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை தி.மு.க. தெற்கு மாவட்டம், சென்னை மேற்கு மாவட்டம்- சென்னை தென்மேற்கு ஆகிய மாவட்டங்களின் சார்பில் சைதாப்பேட்டை கலைஞர் ஆர்ச் அருகே பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் தி.மு.க. ஆட்சியில் மழை வருவதற்கு முன்பாக அதிகாரிகளை அழைத்து பேசி கூட்டம் கூட்டி அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்படுவது உண்டு. மழை வருவதற்கு முன்பு கால்வாய்களை தூர்வாருவது தான் மிக மிக முக்கியமான வேலை.
அதற்குரிய வழிகளை ஏற்பாடு செய்வதற்கு தான் முதலமைச்சராக மு.க ஸ்டாலின் இருந்தபோது மாஸ்டர் பிளான் போட்டு சென்னையை காப்பாற்றினார்.
ஆனால் இன்று த.வெ.க. ஆட்சியில் அதைப் பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. த.வெ.க. ஆட்சியில் மின்கட்டணம் பல மடங்கு உயர்ந்துவிட்டது. மளிகை பொருட்கள் விலையும் உயர்ந்துவிட்டது.
இப்போது மழைக்காலம் தொடங்கிவிட்டது. ஆனாலும் அவர்களுக்கு அதைப்பற்றி கவலை இல்லை. இன்றைக்கு சென்னையில் உள்ள மக்கள் எதைப் பற்றியும் சொல்ல முடியாத அளவுக்கு வேதனையில் இருக்கிறார்கள்.
ஆனால் மக்களுக்காக எப்போதும் குரல் கொடுப்பவர் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின். தமிழ்நாட்டு மக்களை தி.மு.க. எப்போதும் கைவிடாது.
மின்சாரத்தை 20 ரூபாய்க்கு வாங்க வேண்டியதை இன்றைக்கு இந்த அரசு 35 ரூபாய் கொடுத்து வாங்க இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டிற்கு ஒரு லட்சம் கோடி நஷ்டம் வரப்போகிறது இவ்வளவு அதிகம் கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் என்ன? இதற்கு முதலமைச்சர் விஜய் பதில் சொல்லி ஆக வேண்டும்.
த.வெ.க. ஆட்சியின் மெத்தன போக்கால் சென்னை மாநகரத்தை வெள்ளக்காடாக ஆக்க போகிறார்கள். அதை எச்ச ரிக்கவே இந்த ஆர்ப்பாட்டம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா. சுப்பிரமணியன் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு, சென்னை தென்மேற்கு மாவட்ட செயலாளர் வேலு, தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, முன்னாள் எம்.எல்.ஏ. தாயகம் கவி, பிரபாகர்ராஜா, அரவிந்த் ரமேஷ், மாந கராட்சி துணை மேயர் மகேஷ் குமார், கே.கே.நகர் தனசேகரன், பாலவாக்கம் விசுவநாதன், கே.ராம லிங்கம், அகஸ்டின் பாபு, கே.ஏழுமலை, ஆலந்தூர் சந்திரன், பாலவாக்கம் சோமு, கோல்டு பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மேயர் பிரியா தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. துணை பொதுசெயலாளர் திருச்சி சிவா எம்.பி. சிறப்புரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. பேசியதாவது:-
தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் தங்களது கடமையில் இருந்து பின் தங்கியதில்லை.
இத்தனை நாள் உறங்கிக் கொண்டிருந்த த.வெ.க. அரசு தி.மு.க. ஆர்ப்பாட்டம் என்று சொன்னவுடன் விழித்தெழுகிறது. ஐந்தே நிமிடங்களில் தேர்தல் முடிவை மாற்றினேன் என்று சொன்னவர். அவரை இடைத்தேர்தலில் 5 நாட்கள் தெருத் தெருவாக வரவைத்த இயக்கம் தி.மு.க.
5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் நிம்மதியாக இருந்தீர்கள். சென்னையில் மேடு பள்ளங்கள் இல்லாத சாலைகள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருந்த நிலை இன்று மாறிவிட்டது.
த.வெ.க ஆட்சியில் எந்த மக்கள் நலப்பணியும் நடைபெறவில்லை. நாங்கள் ஆர்ப்பாட்டம் என்று அறிவித்த பிறகு நேற்று எல்லோரையும் அழைத்துஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள். இன்றைக்கு மக்கள் அவதிப் படுகிறார்கள். இதை உணர்த்துவதற்காக தான் இந்த ஆர்ப்பாட்டம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பங்கேற்றவர்கள் ஆர்ப்பாட்டத்தில் சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மாவட்டச் செயலாளர்கள் மாதவரம் சுதர்சனம், ஆர்.டி சேகர்,தயாநிதி மாறன் எம்பி, கலாநிதி வீராசாமி, கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிரி ராஜன் எம்.பி. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், ஜோசப் சாமுவேல் வெற்றி யழகன் இ. பரந்தாமன் ப.ரங்க நாதன், கே.எஸ். ரவிச்சந்திரன் மற்றும் புழல் நாராயணன், தமிழன் பிரசன்னா டாக்டர் பூர்ணிமா கார்த்திக் மோகன் தேவ ஜவகர், பகுதி கழக செயலாளர்கள் ராஜசேகர், முரளி, வேலு, சுதாகர், கூ.பீ.ஜெயின், வாசு, ஐ சி எப் முரளிதரன், உள்பட ஏராளமான நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர்கள் வட்டக்கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.