

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் 86.26 சதவீதம், தாராபுரத்தில் 80.30 சதவீதம் வாக்குகள் பதிவானது.
இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை வகித்து வந்தது. தாராபுரம் தொகுதியில் தபால் வாக்கு மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் 2 சுற்றுகளில் த.வெ.க. முன்னிலை வகித்தது.
அதன்பின் எண்ணப்பட்ட வாக்குகளில் த.வெ.க. பின்னுக்குத்தள்ளப்பட்டு அ.தி.மு.க. முன்னிலை வகித்தது. இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
ஆனால் சற்று நேரத்தில், தாராபுரம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா முன்னிலை வகிக்கிறார். தற்போதைய நிலவரப்படி த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா 16,201 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளனர். அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி 14,807 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
இதேபோல், மதுராந்தகம் தொகுதியிலும் தவெக முன்னிலை வகித்து வருகிறது. இந்த தொகுதிகளிலும் திமுக, சிபிஐ, சிபிஐஎம் உள்ளிட்ட கட்சிகள் தொடரந்து பின்னடைவில் இருந்து வருவதால் கட்சிகளின் தலைமை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் தொண்டர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கும் காட்சி.
சென்னை தி.நகரில் உள்ள இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமை அலுவலகம் வெறிச்சோடி கிடைப்பதை படத்தில் காணலாம்.
சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகம் தொண்டர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடைப்பதை படத்தில் காணலாம்.