

வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள தவெக கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு திருமாவளவனுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது.
தமிழகத்தில் கூட்டணி அரசையும் அதன் தொடர்ச்சியாக வரவிருக்கும் தேர்தல்களையும் எதிர்கொள்ளும் வகையில், தமிழக வெற்றிழகம் (தவெக) ஆதரவுத் தலைவர்களின் இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் வரும் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பினை, தவெகவைச் சேர்ந்த அமைச்சர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் நேரில் வழங்கி அழைப்பு விடுத்துள்ளனர்.
சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் அருண்ராஜ் ஆகியோர் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின் போது, வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள தவெக கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அவருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது.
முன்னதாக, கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டணிக்கு பொதுவான பெயர் சூட்டுவது, ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது மற்றும் குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்தை உருவாக்குவது தொடர்பாக அக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
வரவிருக்கும் 9-ஆம் தேதி கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளிடையேயான அடுத்தகட்ட நடவடிக்கைகள், ஒருங்கிணைப்புப் பணிகள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.