

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) 11 மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில், தீவிர விசாரணைக்குப் பின் காங்கிரஸ் கட்சியின் மணிப்பூர் எம்.பி. அங்கோம்சா பிமோல் அகோய்ஜாம் அனைத்துப் பணிகளிலிருந்தும் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கல்வி புகட்டும் ஆசானாகவும், பொறுப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து கொண்டு மாணவிகளிடம் இத்தகைய கீழ்த்தரமான அநாகரிகத்தில் ஈடுபட்டுத் தண்டிக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த மக்கள் பிரதிநிதிகளுக்கே தலைகுனிவு. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மேடைதோறும் பெண்களின் பாதுகாப்புக் குறித்தும், "லட்கி ஹூன் லட் சக்தி ஹூன்" (நான் ஒரு பெண், என்னால் போராட முடியும்) என்று முழங்கிய பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் இப்போது எங்கே பதுங்கிவிட்டார்கள்?
பெண்களின் உரிமை குறித்துப் போலி வேடமிடும் காங்கிரஸ் தலைமை, தங்கள் கட்சி எம்.பி. மீதான இந்த விவகாரத்தில் இத்தனை நாட்களாக வாய்மூடி மவுனம் காத்தது, குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அவர்களின் அழுகிப்போன அரசியலையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து அச்சுறுத்தியதால், பல்கலைக்கழகத்திலிருந்து துரத்தப்பட்ட அங்கோம்சா பிமோல் அகோய்ஜாமை, காங்கிரஸ் தலைமை உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வைப்பதோடு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் தூக்கி எறிய வேண்டும்.
மேலும் பெண்களின் பாதுகாப்பில் இரட்டை வேடம் போட்டுக் குற்றவாளிக்கு மறைமுக அடைக்கலம் கொடுத்ததற்கு திரு. ராகுல் காந்தியும், திருமதி சோனியா காந்தியும் நமது நாட்டுப் பெண்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.