

தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கேரளம் முதல்-மந்திரி சதீசன், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி ஆகிய 5 பேரும் பங்கேற்கிறார்கள்.
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டு தோறும் தென் மாநில முதல்- மந்திரிகள் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2022-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெறவில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டு தென் மாநில முதல்வர்கள் மாநாடு நாளை (19-ந்தேதி) மற்றும் நாளை மறுநாள் (20-ந்தேதி) ஆகிய 2 நாட்கள் மாமல்லபுரத்தில் நடக்கிறது.
மாமல்லபுரத்தை அடுத்துள்ள கோவளம் நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்குகிறார்.
மாநாட்டில் தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கேரளம் முதல்-மந்திரி சதீசன், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி ஆகிய 5 பேரும் பங்கேற்கிறார்கள்.
மேலும் அந்தந்த மாநில தலைமை செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் மாநிலங்களுக்கு இடையயோன ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கூட்டுறவை பலப்படுத்துவது, கட்டமைப்பு மேம்பாடு, நீர்வளப் பகிர்வு, கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை, குற்றங்கள் தடுப்பு, எல்லைப் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
தற்போது காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே முரண்பாடுகள் எழுந்த நிலையில் இந்த கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி அமித்ஷா நாளை (19-ந் தேதி) மாலை 4.50 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை புறப்படுகிறார். இரவு 7.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். விமான நிலையத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் கட்சியினர் வரவேற்கிறார்கள். பின்னர் காரில் கோவளம் செல்கிறார்.
இரவு 9 மணி முதல் ஆய்வு கூட்டம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து இரவில் அந்த ஓட்டலில் தங்குகிறார்.
மறுநாள் (20-ந்தேதி) காலை 10.30 மணிக்கு தென்மாநில முதல்-மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் மாநாடு நடைபெறுகிறது. மதியம் 1.30 மணி வரை நடக்கும் இந்த மாநாட்டில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடனும் பல்வேறு விசயங்கள் பற்றி அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர் அனைத்து முதல்-மந்திரிகளுடன் அமித்ஷா மதிய உணவு அருந்துகிறார். மாலை 2.30 மணி முதல் 3 மணி வரை முக்கிய நிர்வாகிகளை சந்திக்கிறார்.
மாநாட்டை முடித்துக் கொண்டு மாலை 3 மணிக்கு கார் மூலம் சென்னை விமான நிலையம் புறப்படுகிறார். சென்னையில் இருந்து மாலை 3.45 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
மத்திய மந்திரி அமித்ஷா 2 நாட்கள் கோவளம் ஓட்டலில் தங்கி இருப்பதால் ஓட்டல் அமைந்துள்ள பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த பகுதியில் டிரோன்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமித்ஷா மற்றும் முதல்-மந்திரிகள் பயணிக்கும் கிழக்கு கடற்கரை சாலையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சூழ்நிலைக்கு ஏற்ப போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.