தமிழக சட்டசபையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில்

ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதியில் பைபாஸ் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா- அமைச்சர் ராஜ்மோகன்
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா- அமைச்சர் ராஜ்மோகன்
Published on
Summary

நாகப்பட்டினம் அரசு அருங்காட்சியகம் புதுப்பிக்கப்பட்டு விரைவில் திறக்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை வார விடுமுறைக்குப்பின் இன்று கூடியது. இன்றைய கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள், நலத்துறை, வேளாண்மை, மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மீதான கோரிக்கைகளை மீது விவாதம் நடைபெறுகிறது. மேலும் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி சேலை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானமும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

முன்னதாக, சட்டசபையில் வினாக்கள் - விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அதன் விவரம் வருமாறு:-

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

மதுரை முதல் தேனி செல்லும் சாலையில் உசிலம்பட்டி ஆண்டிபட்டி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்றும் ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதியில் பைபாஸ் சாலை அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா ? இதற்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சரின் பதில் என்ன என்று கேட்பதற்கு பதிலாக போக்குவரத்து துறை அமைச்சரின் பதில் என்ன என்று ஆதவ் அர்ஜூனாவிடம் கேட்டார்.

உடனே எழுந்து பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அண்ணே நான் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் என கூறியதால் சட்டசபையில் சிரிப்பலை ஏற்பட்டது. உடனே ஓ. பி. எஸ். தான் பேசியதை திருத்திக் கொண்டார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா:- டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் இன்னும் 2 வழி, ஒரு வழி சாலைகள் அதிகம் உள்ளன. சாலை விரிவாக்கத்திற்கு விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்றார்.

எம்எல்ஏ தென்றல் குமார்:- பாலாற்றின் குறுக்கு உயர்மட்டச்சாலை அமைக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா:- பாலாற்றின் குறுக்கு உயர்மட்டச்சாலை பரிசீலனையில் உள்ளது என்றார்.

எம்எல்ஏ சத்தியபாமா:- திருப்பூர் வேலாம்பாளையம் வரை 3 கிமீ சாலையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா: மதுரை, கம்பம், தேனி, நெல்லை, சென்னை, கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இணைப்பு சாலைகளால் அதிக விபத்துகள் ஏற்படும் நிலையில் உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். சாலைப்பணிகள், நெடுஞ்சாலையுடன் பிற சாலைகளை இணைப்பது தொடர்பாக 182 எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றார்.

எம்எல்ஏ ஜவாஹிருல்லா:- நாகை அருங்காட்சியகத்தை உரிய காலக்கெடு நிர்ணயித்து திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அமைச்சர் ராஜ்மோகன்:- நாகப்பட்டினம் அரசு அருங்காட்சியகம் புதுப்பிக்கப்பட்டு விரைவில் திறக்கப்படும். ரூ.139 லட்சத்தில் பொதுப்பணித்துறை மூலம் முதல்கட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, விரைவில் திறக்கப்படும் என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com