

தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் பல 1000 ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் தேங்காய் காங்கேயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மொத்தமாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த சில மாதங்களாகவே தேங்காய் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்யும் வகையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு தேங்காய் அதிகபட்சமாக ரூ.36 வரை விற்பனையானது. இதனால் தென்னை விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அதன் பின்னர் சந்தையில் தேங்காய் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. கடந்த மாதம் வரை ரூ.26 வரை விற்பனையான ஒரு தேங்காய், தற்போது மேலும் சரிந்து அதிகபட்சமாக ரூ.22 வரை மட்டுமே விற்பனையாகிறது.
அதேபோல ஒரு டன் தேங்காய் ரூ.45 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரத்து 500 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து விட்டதால் தென்னை விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தேங்காய் விலை குறைவிற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாகவே தேங்காய் விலை கணிசமாக அதிகரித்து வந்ததால், ஏராளமான விவசாயிகள் தென்னை விவசாயத்திற்கு மாறினர். இதனால் தென்னை சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது. மேலும் தற்போது மரங்களில் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளதோடு, வெளி மாநிலங்களில் இருந்து தேங்காய் இறக்கு மதியும் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் மார்க்கெட்டுகளில் தேங்காய்க்கான தேவை குறைந்துள்ளதால், காங்கேயம் உள்ளிட்ட வெளிப்பகுதிகளுக்கு நடைபெறும் ஏற்றுமதியும் வெகுவாக சரிந்துள்ளது. இதன் காரணமாக குடோன்களில் தேங்காய்கள் அதிக அளவில் தேக்கமடைந்துள்ளன. இந்த தேக்க நிலையே தற்போதைய திடீர் விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
தற்போதைய கடும் விலை வீழ்ச்சியால், அதிக அளவில் தென்னை மரங்கள் வைத்து பராமரிக்கும் பெரிய விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் குறைந்த அளவிலான மரங்களை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் சிறு விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.