

திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் முன்னிட்டு முதலமைச்சர் விஜய் 20-ந்தேதி பிரம்மாண்ட ரோடு-ஷோ நடத்த திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் பொதுமக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இந்த நிகழ்வு த.வெ.க. தொண்டர்களிடையே உற்சாகத்தையும் பொதுமக்களிடையே எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றார். பின்னர் அவர் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ததால், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
திருச்சி கிழக்கு தொகுதியுடன் சேர்த்து பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை ஆகிய 5 தொகுதிகளும் காலியாக உள்ளன. இந்த 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளதால், தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் முதலமைச்சர் விஜய் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே பெருந்துறை, விராலிமலை தொகுதி அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கியதோடு 'ரோடு ஷோ' நடத்தி மக்களை சந்தித்தார்.
இதன் தொடர்ச்சியாக வருகிற 20-ந்தேதி திருச்சியில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்பதுடன் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்தி பொதுமக்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். 20-ந்தேதி காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமானம் நிலையம் வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் திருச்சி அரசு மருத்துவமனை வரை ரோடு ஷோவாக செல்கிறார்.
பின்னர் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 110 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 600 படுக்கைகள் கொண்ட, 7 தளங்களுடன் கூடிய உயர் சிகிச்சை மைய கூடுதல் கட்டிடத்தை திறந்து வைக்கிறார். மேலும் பச்சிளம் குழந்தைகள் வார்டுக்கு செல்லும் முதலமைச்சர், மருத்துவமனையில் பிறந்த குழந்தை களுக்கு தாய் மாமன் தங்க மோதிரம் அணிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம் பகுதி வழியாக ரோடு-ஷோ நடத்தியப்படி ரேஸ்கோர்ஸ் சாலைக்கு செல்கிறார். அங்கு தேர்வு செய்யப்படவுள்ள ஒரு இடத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகம், தந்தை பெரியார் அரசு கல்லூரி ,ஜமால் முகமது கல்லூரி, தமிழ்நாடு ஓட்டல் ஆகிய இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏதாவது ஒரு இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்வுகளுக்கு பின்னர் பிற்பகல் 1 மணி அளவில் திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் புறப்பட்டு செல்கிறார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ சென்று நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தருவது த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே உற்சாகத்தையும் பொதுமக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே தமிழக நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் நேற்று முன்தினம் திருச்சி வந்து கட்சி நிர்வாகிகள், அமைச்சர்களுடன், முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், ரோடு ஷோ முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு பணிகள் குறித்து போலீசார் சிறப்பு ஆலோசனைகள் நடத்தி வருகின்றனர்.