கோவையில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலக கட்டிடத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய்

இந்த நூலகத்தில் மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் அறிவியல் மையம் உள்ளது.
periyar arivulagam
Published on: 

கோவையில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைக்கிறார். 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த நூலகத்தில் 7 தளங்கள் உள்ளன. இங்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.

பெரியார் நூலகத்தை முதலமைச்சர் விஜய் இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கும் நிலையில், இதற்காக காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு 11 மணிக்கு கோவை விமானம் நிலையம் வருகிறார். அங்கு அவருக்கு அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் த.வெ.க. கட்சியினர் வரவேற்பு அளிக்கிறார்கள்.

பிரமாண்ட ரோடு ஷோ:

கோவை விமான நிலையத்தில் இருந்து அவினாசி ரோடு வழியாக விழா நடைபெறும் காந்திபுரத்துக்கு 10 கிலோ மீட்டர் தூரம் ரோடுஷோ சென்றபடி மக்களை சந்திக்கிறார். காலை 11.45 மணிக்கு நூலகத்தின் முகப்பு பகுதியில் உள்ள பெரியார் சிலை மற்றும் பெரியார் அறிவுலகம் கல்வெட்டை திறந்து வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து அறிவுலகத்தில் உள்ள வரவேற்பறை, அறிவியல் மையம், குழந்தைகள் நூலகம், புத்தகம் படிக்கும் பிரிவு, அறிவியல் மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம் ஆகியவற்றை பார்வையிடுகிறார்.

நலத்திட்ட உதவிகள்:

பின்னர் நூலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் வைத்து அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முதலமைச்சர் விஜய்-க்கு நினைவுப்பரிசு வழங்குகிறார்கள்.

இதையடுத்து கோவை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளையும் முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார். இதுதவிர புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி 100 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

முதலமைச்சராக பதவியேற்ற பின் கோவையில் நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் விஜய் முதன்முறையாக பங்கேற்கிறார். எனவே அவரை வரவேற்கவும், பார்க்கவும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அவினாசி சாலையின் இருபுறமும் தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் விஜய் வருகையையொட்டி கோவையில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. விமான நிலையம் முதல் காந்திபுரம் நூலகம் வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் அந்த பகுதியில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com