

இந்தியாவின் ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ந்தேதி தேசிய விளையாட்டு தினம் (National Sports Day) கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இன்று கொண்டாடப்படும் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இந்திய ஹாக்கி அணியின் தலைசிறந்த வீரரும், உலகளவில் அபார சாதனை படைத்தவருமான மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்தநாளை தேசிய விளையாட்டு நாளாகக் கொண்டாடும் இந்நாளில், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
விளையாட்டு, பதக்கங்களை வெல்வதற்கு மட்டுமல்ல; ஒழுக்கம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு, குழு உணர்வு, ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதற்கான சிறந்த களமாகவும் திகழ்கிறது. ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்க்கைக்கு உடல்தகுதி மிக அவசியம். இளம்தலைமுறையினர் விளையாட்டையும், உடற்பயிற்சியையும் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக வளர்த்துக் கொள்ளவேண்டும்.
சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது திறமைகளைச் சிறப்பாக வெளிப்படுத்தி, வெற்றிகளைக் குவித்து, இந்தியாவின் மூவர்ணக் கொடியை மேலும் உயரத்தில் பறக்கச் செய்திட இந்நாளில் வாழ்த்துகிறேன்.
விளையாட்டில் வளர்வோம் ! வெற்றியில் மிளிர்வோம் ! என கூறியுள்ளார்.