டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய்

இந்தாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சரிவர மழை பெய்யாத காரணத்தால் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
CM Vijay - Mettur dam
Published on
Summary

மேட்டூர் அணையில் இருந்து இன்று டெல்டா பாசனத்திற்கு முதலமைச்சர் விஜய் தண்ணீர் திறந்து வைக்கிறார். இதற்காக அவர் சேலம் செல்வதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை

டெல்டா விவசாயிகளின் உயிர் மூச்சான மேட்டூர் அணை மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர். திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர் உள்பட 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சரிவர மழை பெய்யாத காரணத்தால் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

ஆனால் கடந்த 2 வாரங்களாக கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்தது.

இதனால் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியதை தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து செப்டம்பர் 1-ந்தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும், அந்த தண்ணீர் 45 நாட்கள் திறந்துவிடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.

இன்று தண்ணீர் திறப்பு

நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 91.15 அடியை எட்டி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 501 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் விஜய்

இந்தநிலையில், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு இன்று காலை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்காக முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10.30 மணிக்கு சேலம் செல்கிறார். ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக மேட்டூர் செல்கிறார். பின்னர் அவர் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார். முதலமைச்சர் விஜய் சேலம் செல்வதையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்

நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com