

மாதவரம் பால்பண்ணை ஆய்வுக்கு பிறகு முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்தார்.
சென்னை மாதவரம் பால் பண்ணையில் நடைபெற்று வரும் பால் கையாளும் மற்றும் பால் வினியோகப் பணிகளை பார்வையிட முதலமைச்சர் விஜய் இன்று காலை மாதவரத்துக்கு நேரில் சென்றார். அவரை பார்ப்பதற்காக பொதுமக்கள் ஏராளமானோர் சாலையின் இருபுறமும் திரண்டு இருந்தனர். அவர்களை பார்த்து முதலமைச்சர் விஜய் கையசைத்தபடி சென்றார்.
மாதவரம் பால்பண்ணைக்கு சென்ற அவரை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். அதன்பிறகு பால் பண்ணையை முதலமைச்சருக்கு சுற்றி காண்பித்தனர்.
பால் பண்ணை வளாகத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.2 கோடியே 23 லட்சம் செலவில் புதிதாகக் கட்டப்பட்டு உள்ள ஆவின் மாநில, மத்திய ஆய்வகத்தின் துணைக் கட்டிடத்தைத் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் விஜய் மாதவரம் பால் பண்ணையின் செயல்பாடுகளைப் பார்வையிட்டதோடு, அங்கு நடைபெறும் புதிய பால் பண்ணையின் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை மாநகர மக்களின் எதிர்கால பால் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மாதவரத்தில் நாளொன்றுக்கு 7 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட புதிய பால் பண்ணை 152 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.
மாதவரம் பால்பண்ணை ஆய்வுக்கு பிறகு முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்தார்.
பெரம்பூர் தொகுதி மக்களை சந்தித்து முதலமைச்சர் விஜய் குறைகளை கேட்டறிந்தார். மக்களிடம் இருந்து மனுக்களையும் அவர் பெற்றுக்கொண்டார்.
மக்கள் அளித்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தினார்.
பின்னர், வடசென்னை பகுதிகளில் மழைநீர் தேங்குவது, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.
பெரம்பூர் தொகுதியில் பொதுமக்களிடம் பெறப்பட்ட 2000 மனுக்களில் 1.300 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.