மாற்றுத்திறனாளி மாணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலமைச்சர் விஜய்

மாணவரின் ஆர்வத்தையும் விளையாட்டுத் திறமையையும் ஊக்குவிக்கும் வகையில், அவரது கோரிக்கையை உடனடியாக முதலமைச்சர் விஜய் நிறைவேற்றினார்.
மாற்றுத்திறனாளி மாணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலமைச்சர் விஜய்
Published on: 
Summary

மாற்றுத்திறனாளி மாணவர் அஸ்வின், 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றதற்காக முதலமைச்சர் விஜய்யிடம் பாராட்டு சான்றிதழ் பெற்றார். தனது விளையாட்டு ஆர்வத்தை பகிர்ந்த அஸ்வினுக்கு, முதலமைச்சர் உடனடியாக டேபிள் டென்னிஸ் போர்டை வழங்கி அவரது கனவை நனவாக்கினார்.

10, 12-ம் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு த.வெ.க. விருது வழங்கும் விழா 3-ம் கட்டமாக நேற்று சென்னையில் நடந்தது. தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் விஜய் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

மாற்றுத்திறனாளி மாணவர்

நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் அஸ்வின், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றதற்காக முதலமைச்சர் விஜய்யிடம் பாராட்டு சான்றிதழை பெற்றுக்கொண்டார். அப்போது தனக்குப் பாரா டேபிள் டென்னிஸ் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் இருப்பதாகவும், டேபிள் டென்னிஸ் விளையாடுவதற்கான போர்டு கிடைத்தால் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று சாதனை படைக்க முடியும் என்றும் தனது விருப்பத்தை மாணவர் அஸ்வின் முதலமைச்சரிடம் தெரிவித்தார்.

இன்ப அதிர்ச்சி

மாணவரின் ஆர்வத்தையும் விளையாட்டுத் திறமையையும் ஊக்குவிக்கும் வகையில், அவரது கோரிக்கையை உடனடியாக முதலமைச்சர் விஜய் நிறைவேற்றினார்.

அதன்படி மாணவர் கோரிக்கை வைத்த நிலையில், சில மணி நேரங்களிலேயே, மாலையில் அவருக்கு டேபிள் டென்னிஸ் போர்டு வழங்கப்பட்டது. முதலமைச்சரின் உடனடி நடவடிக்கையால் தனது விளையாட்டு கனவு நனவானதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்த மாணவர் அஸ்வின், முதலமைச்சர் விஜய்க்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், எதிர்காலத்தில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று நிச்சயம் சாதனை படைப்பேன் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்தார். இந்நிகழ்வின்போது ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் உட்பட பல்வேறு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

X