

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ‘தமிழ் தேசிய எழுச்சி மாநாடு’ கோலாகலமாக நடைபெற்றது. இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அனுப்பி வைத்த வாழ்த்துக் கடிதத்தை விசிக தலைவர் திருமாவளவன் மேடையில் பெருமையுடன் படித்துக் காட்டினார். இரு தலைவர்களுக்கும் இடையிலான அரசியல் தோழமையையும் பரஸ்பர மரியாதையையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.
அந்த கடிதத்தில், அன்பிற்குரிய அண்ணண் திருமாவளவன் அவர்களுக்கு வணக்கம், தமிழ் தேசிய எழுச்சி மாநாடு வெற்றிகரமாக நடைபெற எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். திராவிடமும் தமிழ்தேசியமும் இந்த மண்ணின் இரு கண்கள் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிலேயே தெரிவித்தோம்.
எங்கள் செயற்குழு நிறேவேற்றிய தீர்மானத்தில் நிரந்தர அரசியல் தீர்மானத்தை உருவாக்க பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். மேலும் பேரறிஞர் அண்ணாவின் இருமொழிக்கொள்கையே தமிழகத்தின் இறுதியான மொழிக்கொள்கை என்று அறிவித்துள்ளோம்.
இந்நிலையில் தாங்கள் முன்னெடுத்து வரும் இந்த தமிழ் தேசிய எழுச்சி மாநாடு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ்மொழி பெருமையையும் தமிழர் உரிமைகளின் அவசியத்தையும் தமிழ்தேசியத் தேவைகளையும் உண்மைத் தன்மையுடன் உலகிற்கு எடுத்துரைக்கும் தங்களது முயற்சி பாராட்டுக்குரியது. மேலும் இம்மாநாடு தமிழ் சமூகத்தில் எதிர்காலம் குறித்த ஆழமான சிந்தனைகள் ஆக்கப்பூர்மான விவாதங்கள் மற்ற புதிய கொள்கை நோக்கங்கள் உருவாக ஒரு முக்கிய தளமாக அமையும் என நம்புகிறேன்.
இம்மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துகளை தீர்மானங்கள் மற்றும் செயல்திட்டங்கள் உருவாகிட வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன். இம்மாநாட்டின் முடிவுகள் தமிழ்சமூகத்திற்கு புதிய திசையை அமைக்கட்டும். தமிழும் தமிழரும் உயரட்டும்..தமிழ்நாடு வளம் பெறட்டும் என முதலமைச்சர் விஜய் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
வாழ்த்துக் கடிதத்தை வாசித்து முடித்த திருமாவளவன், மாநாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாழ்த்துச் செய்தி அனுப்பிய முதலமைச்சர் விஜய்க்கு தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். எளிய மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் தேசியத்திற்காகவும் குரல் கொடுக்கும் விசிகவின் இந்த மாநாட்டிற்கு முதல்வரின் வாழ்த்து மேலும் உற்சாகத்தையும் எழுச்சியையும் அளித்துள்ளதாக அவர் மாநாட்டு மேடையில் சுட்டிக்காட்டினார்.
மாநாட்டுத் திடலில் கட்டுக்கடங்காத அளவில் தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டதால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. திருமாவளவன் மேடையில் பேசத் தொடங்கியதும், அவரைக் காண்பதற்காக தொண்டர்கள் முன்னோக்கி தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். திடலின் கொள்ளளவைக் கடந்து மக்கள் அலைமோதியதால், சூழலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு தொண்டர்களின் பாதுகாப்பிற்காக விசிக தலைவர் திருமாவளவன் தனது நீண்ட உரையை விரைவாக முடித்துக் கொண்டார்.