

விருதுநகர் அடுத்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த மாடசாமி என்பவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆறுதல் தெரிவித்து, நிதியுதவியை வழங்கியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் சின்னதம்பி பட்டாசு ஆலையில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் தொழிலாளி மாடசாமி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் ஒத்தையால் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள்கள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், ஒத்தையால் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள்கள் தொழிற்சாலையில் இன்று (05.09.2026), எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில்
அங்கு பணியிலிருந்த மீனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. மாடசாமி (வயது 33), த/பெ. ராமர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி அறிந்து மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு நான்கு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.