

த.வெ.க. அரசு பொறுப்பேற்று 100-வது நாளை ஒட்டி 110 விதியின் கீழ் பயிர்க்கடனில் கூடுதல் தள்ளுபடி அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் சில அறிவிப்புகளை வெளியிட்டார். முன்னதாக முதலமைச்சர் விஜய் பேச்சை தொடங்கும் முன்பு, தி.மு.க. தலைவரின் பெயரை குறிப்பிட்டு பேசியது தவறு, அமைச்சர் சார்பில் மன்னிப்பு கேட்கிறேன் என எதிர்க்கட்சியிடம் கேட்டுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் உரையாற்றி தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
* சாதி, மொழி, மதங்களுக்கு அப்பாற்பட்ட தொழில் என்றால் அது விவசாயம் தான்.
* உழவுத் தொழில், விவசாயிகளை மதிக்கும் நாட்டில் தான் மக்கள் வளமாக மகிழ்ச்சியாக வாழ முடியும்.
* தமிழ்நாட்டு விவசாயிகள் நமது உயிர்நாடி.
* த.வெ.க அரசு பல்வேறு நிதி நெருக்கடிகளின் மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றாலும் பயிர்க்கடனை தள்ளுபடி செய்தது.
* விவசாய அமைப்புகளின் கோரிக்கைகளின் படி ரூ.75 ஆயிரம் வரை முழு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
* ரூ.75ஆயிரத்துக்கு மேல் பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு ரூ.35 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்பட்டது.
* 14.44 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,932 கோடி வரை கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
* பயிர்க்கடன் தள்ளுபடியை அதிகரிக்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
* ஆக.7-ல் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது.
* ரூ.75 ஆயிரம் கடன் வாங்கி இருந்தால் 100 சதவீதம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
* ரூ.1 லட்சம் வரை கடன் வாங்கினால் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
* ரூ.1 லட்சத்துக்கு மேலாக பயிர்க்கடன் பெற்றிருந்தால் ரூ.35 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும்.
* ரூ.1 லட்சம் வரை கடன் பெற்ற 2.38 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார்.
த.வெ.க. அரசு பொறுப்பேற்று 100-வது நாளை ஒட்டி 110 விதியின் கீழ் இந்த அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.