குழந்தைகள் தினம்- மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில், ஒரே மகிழ்ச்சி!- அமைச்சர் ராஜ்மோகன்

குட்டி நண்பா, நண்பிகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றார்.
Minister Rajmohan
Published on: 

குழந்தைகள் தினத்தையொட்டி மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் கேக், வாழ்த்து அட்டை வழங்கப்பட்டது; இப்பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியது பள்ளிக்கல்வித் துறையின் குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஜ்மோகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

குழந்தைகள் தினம் – மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில், ஒரே மகிழ்ச்சி!

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒரே நாளில், ஒரே நேரத்தில் குழந்தைகளுக்குக் கேக் மற்றும் “கால அட்டவணையுடன்” கூடிய வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த திட்டமிடல், முறையான களக் கண்காணிப்பு, துல்லியமான செயல்பாடு என எந்தவிதமான அசம்பாவிதங்களுக்கும், புகார்களுக்கும் இடமளிக்காமல் இந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியிருப்பது தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனையாகும்!

ஒரு மாநிலம் முழுவதும், ஒரே நேரத்தில், ஒரு நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைப்பது சாதாரணமான காரியமல்ல. இதற்குப் பின்னால் பல நாட்கள் திட்டமிடல், தொடர் ஆலோசனைகள், களப்பணி, கண்காணிப்பு மற்றும் ஒவ்வொரு நிலையிலும் அர்ப்பணிப்புடன் உழைத்த பலரின் கூட்டு முயற்சி இருக்கிறது.

இந்தச் சிறப்பான முன்னெடுப்பு வெற்றிபெற அயராது உழைத்த பள்ளிக்கல்வித்துறை, உணவுத்துறை, சமூக நலத்துறை, மாவட்ட நிர்வாகம், கண்காணிப்பு அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறைப் பணியாளர்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தக் கொண்டாட்டத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, பள்ளி வளாகங்களைப் புன்னகையாலும் உற்சாகத்தாலும் நிறைத்த தளபதியின் நெஞ்சில் குடியிருக்கும் குட்டி நண்பா நண்பிகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X