நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்

நாளை காலை 10 மணிக்கு டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் கலந்து கொள்கிறார். இந்தக் கூட்டம், நாளை காலை மற்றும் பிற்பகல் என்று இரண்டு பிரிவாக நடைபெறுகிறது.
முதலமைச்சர் விஜய்
Published on

சென்னை:

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று டெல்லி புறப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இன்று காலை முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார்.

முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றடைந்ததும் காங்கிரசின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேச உள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் கூறுகின்றன. இன்று இரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார்.

அதைத்தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் கலந்து கொள்கிறார். இந்தக் கூட்டம், நாளை காலை மற்றும் பிற்பகல் என்று இரண்டு பிரிவாக நடைபெறுகிறது.

அதைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு பின்னர் பிரதமர் நரேந்திர மோடி அளிக்கும் இரவு உணவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார். பின்னர், பிரதமர் மோடி, அனைத்து முதல்-மந்திரிகளுடனும் குழு புகைப்படம் எடுத்துக் கொள்வார். அதோடு நிதி ஆயோக் கூட்டம் நிறைவு பெறும்.

நாளை இரவும் முதலமைச்சர் விஜய் டெல்லியில் தங்குகிறார். 12-ந் தேதி காலையில் மத்திய மந்திரிகள் சிலரை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது. பின்னர் அன்று பிற்பகல் 3 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்படும் முதலமைச்சர் விஜய் மாலை 6 மணிக்கு சென்னை வந்தடைவார்.

டெல்லி பயணத்தின் போது ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை மரியாதை நிமித்தமாக சந்திக்க முதலமைச்சர் விஜய் நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com