

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்து, புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து மகிழ்ந்தார். தாய்மார்களுடன் உரையாடி சிகிச்சை, உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் ரூ.10.25 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட காந்தி நினைவு அருங்காட்சியகத்தை திறந்து வைத்து, காந்தியின் நினைவுச்சின்னங்களை பார்வையிட்டார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் விஜய், குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை தனது கைகளாலேயே அணிவித்து மகிழ்ந்தார். முதலில் மோதிரம் அணிவிக்கப்பட்ட குழந்தை முதலமைச்சர் விஜய்யின் முகத்தை பார்த்து சிரித்தது பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அதைப்பார்த்ததும் குழந்தையின் தாய் கண்ணீர் மல்க முதலமைச்சர் விஜய்க்கு நன்றி கூறினார். அதேபோல் விழாவில் சில குழந்தைகளுக்கு முதலமைச்சர் விஜய் பெயர் சூட்டி, குழந்தையின் காதில் 3 முறை அந்த பெயரை உச்சரித்தார்.
பின்னர் தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட பயனாளிகளுடன் முதலமைச்சர் விஜய், ஒன்றாக அமர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பின்னர் அங்கிருந்து பிரசவ வார்டுக்கு சென்ற முதலமைச்சர் விஜய், சமீபத்தில் பிறந்த குழந்தைகள் 10 பேருக்கு தனது கைகளாலேயே தங்க மோதிரங்களை உணர்ச்சி பெருக்குடன் அணிவித்தார். மேலும் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களிடம் பேசி, சிகிச்சை விபரங்களை கேட்டறிந்ததுடன், உடல் நலனையும், பிரசவத்திற்கு பிறகு உடல் நலனை பேணுவது குறித்தும் அறிவுரைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த முதலமைச்சர் விஜய், அங்கு திரண்டிருந்த பொதுமக்களை பார்த்து வணக்கம் தெரிவித்ததுடன் உற்சாகமாக கையசைத்து அவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார். அங்கிருந்து மீண்டும் திறந்தவெளி வேனில் மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்கு சென்றார்.
அங்கு ரூ.10.25 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ள புதுப்பிக்கப்பட்ட காந்தி மியூசியத்தை திறந்துவைத்து பார்வையிட்டார். மேலும் மகாத்மா காந்தி பயன்படுத்திய கைத்தடி, கண் கண்ணாடி, போராட்டத்தில் கலந்துகொண்டு காயம் அடைந்த அவரது ரத்தம் தோய்ந்த ஆடை ஆகியவற்றை பார்த்து விபரங்களை கேட்டறிந்தார். அத்துடன் பொதுமக்கள் பார்வைக்காக விரைவில் அனுமதி வழங்குமாறும் தெரிவித்தார்.
பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்ட முதலமைச்சர் விஜய் மதுரை அழகர்கோவில் சாலை அவுட்போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்று அங்கு மதிய உணவு சாப்பிட்டார். சிறிது நேர ஓய்வுக்கு பிறகு அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்கிறார்.