சென்னை-புதுச்சேரி படகு போக்குவரத்து: மத்திய அமைச்சரிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் கோரிக்கை!

மகாபலிபுரம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் புதிய கடல் நடைபாதைகள் மற்றும் படகுத் துறைகளை அமைப்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
Minister Adhav Arjuna
Published on: 
Summary

சென்னை மற்றும் புதுச்சேரி இடையே பயணிகள் படகு போக்குவரத்தைத் தொடங்குவதுடன், தமிழ்நாட்டின் பல்வேறு கடல்சார் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு விரைவாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சார்பானந்த சோனாவாலிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தியுள்ளார்.

தலைநகர் டெல்லியில் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சார்பானந்த சோனாவாலை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்துப் பேசினார். தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்தப் சந்திப்பின்போது, தமிழ்நாட்டின் கடல்சார் மற்றும் நீர்வழிக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு முக்கியத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன், அவற்றுக்கான மத்திய அரசின் நிதியுதவியும் கோரப்பட்டது.

படகுத் துறைகள் அமைப்பு

இந்தச் சந்திப்பின் போது, சென்னை துறைமுகத்தை நவீனப்படுத்துவது மற்றும் சென்னை மெரினா, மகாபலிபுரம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் புதிய கடல் நடைபாதைகள் மற்றும் படகுத் துறைகளை அமைப்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, சென்னை மற்றும் புதுச்சேரி இடையே பயணிகள் படகு போக்குவரத்தை உடனடியாகத் தொடங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச படகு சேவை

மேலும், ராமேஸ்வரம் - இலங்கை தலைமன்னார் இடையே பன்னாட்டுப் பயணிகள் படகு போக்குவரத்தைத் தொடங்கும் வகையில் இராமேஸ்வரம் துறைமுகத்தை மேம்படுத்துதல், கடலூர் பசுமைவள ஆழ்கடல் துறைமுகத்தை உருவாக்குதல் ஆகிய திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. இவற்றுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க பக்கிங்காம் கால்வாயைப் புனரமைத்து ஆழப்படுத்துவது குறித்தும், நாட்டின் மேற்கு மற்றும் கிழக்குக் கடல் பகுதிகளை இணைக்கும் பாம்பன் கால்வாயை 10 மீட்டர் ஆழத்திற்குத் தரம் உயர்த்துவது குறித்தும் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

X