

தாக்குதலில் காயமடைந்த கண்ணன் மற்றும் புவனேஸ்வரன் இருவரும் கே.கே நகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினர்.
சென்னை அசோக் நகர், போக்குவரத்து பிரிவு போலீஸ் ஏட்டு புவனேஸ்வரன். இவர் நேற்று மாலை அசோக்நகர் 100 அடி சாலை - லட்சுமன் ஸ்ருதி சந்திப்பில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணனுடன் சேர்ந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வடபழனியில் இருந்து அசோக் நகர் நோக்கி வந்த கார் ஒன்று “யூ டர்ன்” எடுக்க முயன்றது.
இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை கண்ட ஏட்டு புவனேஸ்வரன் ஓடி வந்து காரில் இருந்த வாலிபரிடம் இங்கு திரும்ப கூடாது, சற்று தூரம் சென்று வளைவில் திரும்பி செல்லும்படி கூறினார். பலமுறை கூறியும் அங்கிருந்து போக மறுத்த வாலிபர் காரை தடை செய்யப்பட்ட பகுதியில் திருப்ப முயன்றார். உடனடியாக புவனேஸ்வரன் தனது செல்போனில் காரை படம் பிடித்தார்.
இதில் ஆத்திரமடைந்த வாலிபர் திடீரென காரை சாலையின் நடுவே நிறுத்திவிட்டு கீழே இறங்கி தகாத வார்த்தைகளால் பேசி “என்னையே படம் பிடிப்பாயா, முடிந்தால் வழக்கு போடு “ என்று கூறி புவனேஸ்வரனின் செல்போனை பறித்து அவரை தாக்கினார்.
இதை தடுத்து கண்டித்த சப்- இன்ஸ்பெக்டர் கண்ணனையும் தாக்கிய வாலிபர் காரில் ஏறி தப்பி சென்றுவிட்டார்.பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாக்குதலில் காயமடைந்த கண்ணன் மற்றும் புவனேஸ்வரன் இருவரும் கே.கே நகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினர். தகவல் அறிந்து வந்த அசோக் நகர் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு மற்றும் காரின் பதிவு எண்ணை வைத்து நடத்திய விசாரணையில் போலீசார் மீது தாக்குதல் நடத்தி தப்பியது மாங்காடு பகுதியை சேர்ந்த பிரகாஷ் (39) என்பது தெரிந்தது.
அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் பிரகாசை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.