5,904 சதுர கி.மீ. ஆக விரிவடையும் சென்னை பெருநகரப் பகுதி: ரூ.45.50 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

சர்வதேச அளவில் புகழ்பெற்ற நகர்ப்புறத் திட்டமிடல் ஆலோசனை நிறுவனத்தை நியமிக்கவும் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
Chennai Metropolitan
Published on: 
Summary

ஒருங்கிணைந்த பெருநகர வளர்ச்சித் திட்டத்தின் கீழ், விரிவாக்கப்பட்ட பகுதிகளில் சீரான நகர்ப்புற வளர்ச்சி, நவீன போக்குவரத்துக் கட்டமைப்பு, அனைவருக்கும் வீட்டு வசதி, பொருளாதார மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய முக்கிய அம்சங்கள் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.

சென்னை பெருநகரப் பகுதியின் நிர்வாக எல்லையை 5,904 சதுர கிலோமீட்டராக விரிவுபடுத்தி, அப்பகுதிகளுக்கான நீண்டகால ஒருங்கிணைந்த பெருநகர வளர்ச்சித் திட்டத்தைத் தயாரிப்பதற்காக ரூ.45.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளது.

தற்போது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிர்வாக வரம்பு 1,189 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. எதிர்கால நகர்ப்புறத் தேவைகள் மற்றும் மக்கள் தொகைப் பெருக்கத்தை கருத்தில் கொண்டு, இந்த நிர்வாக எல்லையை 5,904 சதுர கிலோமீட்டராக விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. விரிவாக்கப்பட்ட இந்தப் பிரம்மாண்டப் பகுதிக்கான தொலைநோக்கு வளர்ச்சித் திட்டத்தைத் துல்லியமாக வடிவமைக்க, சர்வதேச அளவில் புகழ்பெற்ற நகர்ப்புறத் திட்டமிடல் ஆலோசனை நிறுவனத்தை நியமிக்கவும் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நீர்நிலைகள் பாதுகாப்பு

இந்த ஒருங்கிணைந்த பெருநகர வளர்ச்சித் திட்டத்தின் கீழ், விரிவாக்கப்பட்ட பகுதிகளில் சீரான நகர்ப்புற வளர்ச்சி, நவீன போக்குவரத்துக் கட்டமைப்பு, அனைவருக்கும் வீட்டு வசதி, பொருளாதார மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய முக்கிய அம்சங்கள் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. குறிப்பாக, நகரமயமாக்கலால் இயற்கை வளங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்களைப் பாதுகாப்பதற்கு இந்த திட்டத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.

பேரிடர் மேலாண்மை

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், பல்வேறு பகுதிகளை இணைக்கும் போக்குவரத்து வழித்தடங்களை மேம்படுத்தவும், தடையற்ற குடிநீர் விநியோகம் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையிலான நவீனத் திட்டமிடல்களும் இதில் இடம்பெற உள்ளன. இந்த நடவடிக்கையின் மூலம், அடுத்த சில பத்தாண்டுகளுக்கான சென்னை பெருநகரப் பகுதியின் வளர்ச்சித் தேவைகளைத் திட்டமிட்ட முறையில் எதிர்கொள்ள அரசு அடித்தளம் அமைத்துள்ளது.

X