

தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்தாலும் அடுத்த வாரம் முதல் வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகலில் வெயில் சுட்டெரித்த போதிலும் இரவு நேரத்தில் ஆங்காங்கே லேசான மழை பெய்து வருகிறது.
மழை குறித்து சென்னை மண்டல வானிலை இயக்குனர் துரை கூறியதாவது:-
வட தமிழக மாவட்டங்கள் தொடங்கி திருநெல்வேலி வரை என 3 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும். இயல்பை விட 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கடல் காற்று உள்ளே வந்து நில காற்றுடன் சேர்ந்து வீசுவதால் மாலை நேரங்களில் மழை பெய்கிறது.
தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்தாலும் அடுத்த வாரம் முதல் வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வடமேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழக கடலோரப் பகுதிகளில் 17-ந்தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை இன்னும் 2 நாட்களுக்கு பெய்யக்கூடும்.
தென்மேற்கு பருவமழை குறையும் போது வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான். வெப்பம் அதிகரிப்பதற்கு எல் நினோவும் ஒரு காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.