

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கான பணிக்கொடை உச்சவரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு 2024 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஓய்வூதிய பணிக்கொடை மற்றும் இறப்பு பணிக்கொடை உச்சவரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு கடந்த 2024 செப்டம்பர் 6-ந்தேதி வெளியிட்ட அரசாணையில், அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை உச்ச வரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்தி உத்தரவிட்டது. இதனை மின் பகிர்மான கழகத்திலும் அமல்படுத்த அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உயர்வு 2024 ஜனவரி 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வருகிறது. இதன்படி, 2024 ஜனவரி 1 முதல் இதுவரை ஓய்வுபெற்ற மற்றும் பணிக் காலத்தில் உயிரிழந்த தகுதி உள்ள ஊழியர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட பணிக்கொடைக்கும், உயர்த்தப்பட்ட உச்சவரம்புக்கும் இடையிலான வித்தியாச தொகையை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், வருமான வரி விதிகளின்படி பணிக்கொடையில் ரூ.20 லட்சம் வரையிலான தொகைக்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்படும். அதற்கு மேல் வழங்கப்படும் தொகை வரிக்குட்பட்ட வருமானமாக கருதப்படும்.
கூடுதல் தொகைக்கான வருமான வரி பிடித்தம் செய்வதற்கான நடைமுறைகள் பின்னர் தனியாக வெளியிடப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும்.