

7 வயது சிறுமி மாயம் தொடர்பான விசாரணையில், பரதன்தாங்கல் ஏரியில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. 50 வயதுடைய ஆணின் எலும்பாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மதுபாட்டில் மற்றும் வேட்டி போன்ற பொருட்கள் வழக்கின் முக்கிய தடயமாக மாறியுள்ளன. காணாமல் போனவர்களின் விவரங்களை சேகரித்து விசாரணை தீவிரமாக நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியை சேர்நத 7 வயது சிறுமி ஹேமலதா கடந்த மாதம் 12-ந்தேதி மாயமானார்.
இதுகுறித்து முதலில் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், எந்த துப்பும் கிடைக்காததை அடுத்து இந்த வழக்கானது சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் 23 நாட்களாக ஆலம்பூண்டி கிராமத்தில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இருந்தும் சிறுமி எங்கு இருக்கிறார் என்பதற்கான எந்தவொரு முதற்கட்ட தடயமும் கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து கடந்த 11-ந்தேதி சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி. விக்ரமன் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி எஸ்.பி ஜவகர், டி.எஸ்.பிக்கள் வேல்முருகன், கீதா உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனைக்கு பிறகு விசாரணை புதிய கோணத்தில் தொடங்கியது. விசாரணையின் அடுத்த கட்ட நடவடிக்கையாக தேடுதல் பணிக்கு போலீசார் கூடுதல் முக்கியத்துவம் அளித்து அதனை தீவிரப்படுத்தினர்.
அதன்படி நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து, 100-க்கும் மேற்பட்ட போலீசார், ஆலம்பூண்டி கிராமத்திற்கு அருகே உள்ள சிறுவாடி காப்புக்காட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் 2 குழுவில் ஏஸ், ஜாக்கி என்ற மோப்பநாய்களும் பயிற்சியாளர் செல்வகுமார் தலைமையில் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
சிறுவாடி காட்டுப் பகுதியில் உள்ள புதர்கள், பாறை இடுக்குகள் என ஒவ்வொரு இடமாக சல்லடை போட்டு தேடினர். அப்போது, ஆலம்பூண்டி கிராமத்திற்கு அருகே உள்ள பரதன்தாங்கல் கிராமத்தில் உள்ள ஏரி பகுதியில் உள்ள முட்புதரில் மனித எலும்புக்கூடு ஒன்று கிடந்தை பார்த்தனர்.
உடனடியாக போலீசார் அந்த இடத்தை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்தனர். பின்னர் அந்த எலும்புக்கூட்டை கைப்பற்றிய சி.பி.சி.ஐ.டி. போலீசார், அதனை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பினர்.
இன்றுடன் சிறுமி மாயமாகி 34 நாட்களை கடந்து விட்டது. ஆனாலும் சிறுமி பற்றி இதுவரை எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பரதன்தாங்கல் ஏரி அருகே முட்புதரில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு 50 வயதுடைய ஆணாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.
மேலும் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடின் அருகே வேட்டி, சட்டை, மதுபாட்டில் மற்றும் விஷ பாட்டில், செருப்பு ஒன்றும் கிடந்துள்ளது.
அத்துடன் அந்த மதுபாட்டில் கீழ்பெண்ணாத்தூர் டாஸ்மாக் கடையில் வாங்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் 3 மாதங்களுக்கு முன்பாக மரணம் நிகழ்ந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுதொடர்பாக வி.ஏ.ஓ. ரஞ்சிதம் சத்தியமங்கலம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் காணாமல் போனவர்களின் விவரங்களை சேகரித்து விசாரணையை துரிதப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மதுபாட்டில் வாங்கப்பட்ட இடம் கீழ் பெண்ணாத்தூர் என்பது தெரிந்துள்ளதால் அங்கும் 3 மாதங்களுக்கு முன்பாக யாராவது மாயமாகினரா? என்ற தகவல்களையும் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.