தாராபுரம் பிரசாரத்தில் சிறுவனை ஈடுபட வைத்த உதயநிதி மீது வழக்குப்பதிவு

தாராபுரத்தில் தேர்தல் நடத்தை விதி மீறி பரப்புரையில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு.
Udhayanithi stalin
Published on: 

தாராபுரம் நகர் பெரியார் சிலை அருகே விதிமீறி பரப்புரை வாகனத்தில் ஏற்றி சிறுவனை பேச வைத்ததாக உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் வேட்பாளர் சத்தியபாமாவை கடுமையாக சாடி பேசினார்.

தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், "சத்தியபாமா சாதாரண பல்டி பாமா அல்ல, அவர் ஒரு அந்தர் பல்டி பாமா. தேர்தலில் அவர் ஒருவேளை வெற்றி பெற்றால் மீண்டும் கட்சி மாறி விடுவார். சத்தியபாமா மேடையில் அழுததைப் பார்த்து மக்கள் பரிதாபப்பட தேவையில்லை; அவரைத் தேர்வு செய்த மக்கள் தான் அழ வேண்டும்" என்று விமர்சித்தார்.

தொடர்ந்து, சட்டப்பேரவையில் அரங்கேறும் நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி பேசிய அவர், சட்டப்பேரவையில் காதில் பஞ்சு வைத்துக்கொள்ளும் அளவுக்கு முதல்வர் விஜய் கத்துகிறார்.

மதுராந்தகம் தொகுதியில் கத்திப் பேசிய விஜய், தாராபுரத்தில் வந்து நடிக்கிறார். சட்டப்பேரவையில் நான் கேட்ட 18 கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் அளிக்கவில்லை. சட்டப்பேரவையில் யாரும் ஓடக்கூடாது எனச் சொல்லிவிட்டு முதலமைச்சரே ஓடினார்.

அண்ணன் எடப்பாடி பழனிசாமி பேசியதைக் கேட்கக் கூட பேரவையில் முதல்வர் இல்லை. காதல் தோல்வி பற்றி எம்.எல்.ஏ பேசுகிறார், அதற்கு முதலமைச்சர் சிரிக்கிறார். என்ன கேள்வி கேட்டாலும் பாட்டு மட்டுமே பாடுகிறார்கள். சட்டசபையில் முதல்வர் முன் நடனமும், சண்டைக் காட்சியும் மட்டும்தான் இன்னும் அரங்கேறவில்லை.

தமிழ்நாட்டின் நிலைமை கவலைக்கிடம் தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் ரீல்ஸ் போடுபவர்கள், முறுக்கு சுத்துபவர்கள், உருட்டுக்கட்டை, போதை, திருட்டு விசிடி மற்றும் பவுடர் அமைச்சர்கள் என அமைச்சரவையே விசித்திரமாக உள்ளது. தமிழ்நாட்டில் மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் இடையேதான் போட்டியே நடக்கிறது” எனக் கூறி திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

சிறுவனை வைத்து பிரசாரம்

பிரசாரத்தின்போது சிறுவனை வாகனத்தில் ஏற்றிய உதயநிதி கையில் மைக்கை கொடுத்து பேச வைத்தார்.

அப்போது அந்த சிறுவன் திமுகவினர் பேசிய பிரசார வாக்கியத்தை பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த சிறுவன்,"போடுங்கம்மா ஓட்டு..உதய சூரியனைக்கு.." என்றார். அப்போது குறுக்கிட்ட உதயநிதி ஓம் காளி என்று கூற, சிறுவன் "ஓம் காளி மந்திர காளி விஜய் ஒரு ஓடுகாளி" என முழக்கமிட்டார்.

இதற்கு, உதயநிதி ஸ்டாலின் விழுந்து விழுந்து சிரித்தார். தொண்டர்களும் ஆரவாரம் செய்தனர்.

வழக்குப்பதிவு

இந்நிலையில், தாராபுரத்தில் தேர்தல் நடத்தை விதி மீறி பரப்புரையில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளிலும் சிறுவர்கள் ஈடுபடுத்தக்கூடாது என்று விதிமீறியதாக உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com