த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரம்: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கு தள்ளுபடி- சுப்ரீம் கோர்ட் உத்தரவு

25 அ.தி.மு.க. எம்.​எல்.​ஏ.க்​களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, பொதுச்செய​லாளர் எடப்பாடி பழனி​சாமி தரப்​பில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் மனு அளிக்​கப்​பட்​டது.
சுப்ரீம் கோர்ட்
Published on: 
Summary

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலையிட மறுத்தது. கட்சி மன்னிப்பு அளித்ததால், வழக்கு முடிவுக்கு வந்தது என நீதிபதிகள் கூறினர்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. மே 10-ந்தேதி விஜய், முதலமைச்சராக பதவி ஏற்றார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு

இதையடுத்து கடந்த மே மாதம் 13-ந்தேதி தமிழக சட்​டசபையில் த.வெ.க. அரசு மீது நம்​பிக்​கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. கொறடா உத்​தரவை மீறி, த.வெ.க. அரசுக்கு ஆதர​வாக அ.தி.மு.க.வை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர்.

இதையடுத்து 25 அ.தி.மு.க. எம்.​எல்.​ஏ.க்​களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, பொதுச்செய​லாளர் எடப்பாடி பழனி​சாமி தரப்​பில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் மனு அளிக்​கப்​பட்​டது.

மன்னிப்பு கடிதம்

இதையடுத்து அ.தி.மு.க. எம்​.எல்​.ஏ.க்​கள் 4 பேர் ராஜி​னாமா செய்தனர். மற்ற 21 எம்.​எல்.​ஏ.க்​கள் மன்​னிப்பு கோரி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கடிதம் அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட அவர் 21 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை மனுவை திரும்​ப பெற்​றுக்கொள்​வ​தாக சபாநாயகரிடம் கடிதம் அளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அ.தி.மு.க. எம்.எல்​.ஏ.க்கள் 21 பேருக்கு எதி​ரான தகுதி நீக்க நடவடிக்கைகளை கைவிடு​வ​தாக அறிவித்​தார்.

பொதுநல வழக்கு

21 அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிடுவதாக அறிவித்த சபாநாயகரின் உத்தரவை ரத்து

செய்​யக்கோரி, வக்கீல் பி.வி.செல்​வகு​மார் என்​பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்​தார். அதில், ‘கட்சி மாறி வாக்​களித்​தவர்​களை மன்னிக்க அரசி​யல் கட்சிகளுக்கு அதி​காரம் இல்​லை’ என்று கூறி இருந்தார்.

அந்த மனுவை விசா​ரித்த சென்னை ஐகோர்ட் ‘சட்​டப்​படி, 15 நாட்களுக்​குள் எம்​.எல்​.ஏ.க்​கள் மன்​னிப்பு கோரி கடிதம் அளித்​து​விட்டதால், தகுதி நீக்​கம் என்ற கோரிக்​கையே எழவில்​லை. எனவே, தகுதி நீக்க நடவடிக்​கையை கைவிட்​டது சரி​தான்’ என்று கூறி பி.வி.செல்வகுமாரின் மனுவை தள்​ளு​படி செய்தது.

தள்ளுபடி

இதையடுத்து 21 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கு விவகாரத்தில் ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் ரவி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களை கட்சி தலைமை மன்னித்துவிட்ட நிலையில், இதில் கோர்ட்டு தலையிட முடியாது. இந்த விவகாரம் ஏற்கெனவே முடிந்து விட்டது. இனி இதில் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்’ என்று கேள்வி எழுப்பினார்கள். பின்னர் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

X