த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் ரூ.30 கோடி பேரம் பேசிய விவகாரம்: மதுரை அதிமுக நிர்வாகி மன்னன் கைது

ரூ.100 கோடி கொடுத்தாலும் த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் விலைபோக மாட்டார்கள். முதலமைச்சர் விஜய்யின் பின்னால் அனைவரும் உறுதியாக நிற்கிறோம் என்றும் த.வெ.க. திட்டவட்டமாக தெரிவித்தது.
கைதான அதிமுக நிர்வாகி மன்னன்
Published on: 
Summary

த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் ரூ.30 கோடி பேரம் பேசிய விவகாரத்தில் மதுரை முன்னாள் மேயர் மன்னன் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 104 இடங்களில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகைள், கம்யூனிஸ்டு கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

குதிரை பேரம்

இதற்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க.வை தோற்கடிக்கும் முயற்சியில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இறங்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

அதற்காக த.வெ.க மற்றும் அதன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களைக் குறிவைத்து ஆட்சியைக் கவிழ்க்கும் சதி நடப்பதாகப் புகார்கள் எழுந்தன. குறிப்பாக, த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கோடிக்கணக்கில் பணம் பேரம் பேசப்பட்டதாகவும், ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவும் சதி நடப்பதாகவும் பகிரங்கத் தகவல்கள் வெளியாயின.

எம்.எல்.ஏ.க்கள் புகார்

அந்த வகையில் த.வெ.க.வைச் சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. இளையராஜா, தனக்கு சுமார் ரூ.35 கோடி வரை லஞ்சப் பணம் பேரம் பேசப்பட்டதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். விஜய் தலைமையிலான புதிய அரசை கவிழ்க்கும் நோக்கில், சுமார் 15 த.வெ.க எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைக்க திட்டமிடப்பட்டு இந்த பேரம் நடந்ததாகப் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேபோல் மேலும் ஒருசில த.வெ.க. எம்.எல்.ஏ.க்களும் தங்களை விலைக்கு வாங்க குறிப்பிட்ட தரப்பினர் முயன்றதாகக் குற்றம்சாட்டினர்.

தீவிர விசாரணை

இந்த விவகாரம் தொடர்பாகத் தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டது. புகாரின் அடிப்படையில் சென்னை மற்றும் கரூரைச் சேர்ந்த சில நபர்கள் மற்றும் யூடியூபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்தச் சதித் திட்டத்தின் பின்னணியில் எதிர்க்கட்சிகள் மற்றும் சில அரசியல் பிரமுகர்கள் இருக்கிறார்களா என்பது குறித்த கோணத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தங்களின் வளர்ந்துவரும் செல்வாக்கைக் குலைக்கவும், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியிலும் பிரதான எதிர்க்கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. போன்ற சில சக்திகள் இணைந்து இந்தத் குதிரை பேர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகத் த.வெ.க அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் குற்றம் சாட்டினர். மேலும், ரூ.100 கோடி கொடுத்தாலும் த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் விலைபோக மாட்டார்கள். முதலமைச்சர் விஜய்யின் பின்னால் அனைவரும் உறுதியாக நிற்கிறோம் என்றும் த.வெ.க. திட்டவட்டமாக தெரிவித்தது.

மீண்டும் பரபரப்பு

இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் முற்றிலும் மறுத்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மதுரை வந்த மத்திய தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. முஸ்தபா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு மூடியதைப் பார்த்தோம். மக்களுக்குத் தேவையான திட்டங்களை அதே பெயரில் தற்போதைய முதலமைச்சர் மீண்டும் செயல்படுத்தி வருகிறார். ஆனால் இந்த ஆட்சியைக் கெடுக்க வேண்டும் என்று சிலர் முயற்சி செய்கின்றனர். மீண்டும் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபடுகின்றனர்.

ரூ.30 கோடி

எனக்கும் அ.தி.மு.க.வினர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரூ.30 கோடி வாங்கிக் கொள்ளுங்கள் என்றும், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டு வரும்போது அந்தத் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர். இது தொடர்பாக கட்சித் தலைமையிடம் உடனடியாக நான் புகார் அளித்துள்ளேன்.

இந்தப் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் என்னை தொடர்பு கொண்டு பேசுகின்றனர். அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இணைந்துதான் இந்த முயற்சியில் ஈடுபடுகின்றன. ரூ.100 கோடி கொடுத்தாலும் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாற மாட்டார்கள். இதுகுறித்து கட்சித் தலைமையிடம் தெரிவித்துள்ளேன். இன்னும் ஓரிரு நாட்களில் யார் இதன் பின்னணியில் உள்ளனர் என்பது வெளிவரும் என்று தெரிவித்து இருந்தார்.

முன்னாள் துணை மேயரிடம் விசாரணை

இந்தநிலையில் மதுரை மத்திய தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. முஸ்தபாவிடம் ரூ.30 கோடி பேரம் பேசியது தொடர்பான புகாரின் அடிப்படையில் மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் பி.எம்.மன்னனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். அதன்படி இன்று அதிகாலை மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரது வீட்டிற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்றனர். பின்னர் அவரை வேனில் அழைத்துக்கொண்டு விஸ்வநாதபுரத்தில் உள்ள தங்களது அலவலகத்திற்கு சென்றனர்.

அங்கு த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் தொடர்பாக மன்னனிடம் அதிரடி விசாரணை நடத்தப்பட்டது. இந்த பேரம் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது, த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் பேரம் பேச உத்தரவிட்டது யார், முதலில் ரூ.15 கோடி எனவும், நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு பிறகு ரூ.15 கோடி எனவும் மொத்தம் ரூ.30 கோடி பேசப்பட்டது உண்மையா? இது தொடர்பான செல்போன் உரையாடல்கள் எதுவும் பதிவு செய்யப்பட்டு உள்ளதா? தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டதா? இதேபோல் வேறு ஏதாவது த.வெ.க. எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசப்பட்டதா? உள்ளிட்டவை குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, த.வெ.க. ஆட்சிக்கு எதிராக குதிரை பேரத்தில் ஈடுபட முயன்றதாக மன்னனை போலீசார் கைது செய்துள்ளனர்.

முன்னதாக, குதிரை பேரம் தொடர்பாக முன்னாள் மேயரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்ற தகவல் அறிந்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் அ.தி.மு.க. வினர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம் முன்பு திரண்டு வருகிறார்கள். அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தன்னிடம் நடத்தப்பட்ட குதிரை பேர பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று ஓரிரு நாட்களில் தெரிய வரும் என்று த.வெ.க. எம்.எல்.ஏ. முஸ்தபா தெரிவித்திருந்த நிலையில் இன்று முன்னாள் துணை மேயரை போலீசார் கைது செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.

X