

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக அரசு கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானம்மீது, கொறடா உத்தரவை மீறி தவெகவிற்கு ஆதரவாக 25 அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.
இதையடுத்து 25 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.
அதே போல, தங்கள் தரப்பு கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி.வேலுமணி தரப்பிலும் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதனிடையே தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 எம்.எல்.ஏ.க்களில் 21 பேர் மன்னிப்புக் கடிதம் கொடுத்ததால், அவர்கள் மீதான தகுதி நீக்க புகாரையும் இபிஎஸ் திரும்பப் பெற்றார். மீதமுள்ள 4 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
அதே போல, 22 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி.வேலுமணி தரப்பில் விஜயபாஸ்கர் அளித்த மனுவையும் திரும்பப் பெறுவதாகக் கூறி கடிதம் அளித்தார். இரு கடிதங்களையும் ஏற்றுக் கொண்ட சபாநாயகர், 43 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைகளை கைவிடுவதாக அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர், சட்டப்படி 15 நாட்களுக்குள் மன்னிப்பளித்து கடிதம் அளிக்கப்பட்டுள்ளதால் தகுதி நீக்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
இதனால் மனுதாரர் கட்சி எந்த வகையில் பாதிக்கப்பட்டுள்ளது? இந்த பொதுநல மனு விசாரணைக்கு உகந்ததல்ல. மேலும், வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய உள்ளோம் என்று எச்சரிக்கை செய்தனர்.
நீதிபதிகள் எச்சரித்ததை அடுத்து, மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.