

அரசாங்கம் தலையிட்டு ஊட்டி கேரட்டுக்கு நியாயமான கொள்முதல் விலையை நிர்ணயிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மலைக்காய்கறிகள் விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்குள்ள பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஊட்டி கேரட்டுகளை பயிரிட்டு உள்ளனர்.
நடப்பாண்டு பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் பயிர்களை காக்கும் பொருட்டு லாரிகளில் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பாய்ச்ச வேண்டி இருந்தது.
கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட ஊட்டி கேரட்டுகள் விற்பனைக்காக சமவெளி பகுதிகளில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்பட்டன. ஆனால் அங்கு தற்போது ஒரு கிலோ ஊட்டி கேரட் ரூ.15 முதல் ரூ.25 வரை தரத்திற்கு ஏற்றபடி கொள்முதல் செய்யப்படுகிறது.
கேரட் விலைவீழ்ச்சியால் முதலீடு செய்த பணம் கூட கிடைக்காத சூழலில், தோட்ட விவசாயிகள் விரக்தி அடைந்தனர். தொடர்ந்து அறுவடை செய்யப்பட்ட கேரட்டுகளை விவசாயிகள், அங்குள்ள காலநடைகளுக்கு தீவனமாக, சாலையோரம் கொட்டி விட்டு வேதனையுடன் புறப்பட்டு சென்றனர்.
தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் கேரட்டுகளை பராமரித்து அறுவடை செய்து விற்பனைக்காக சந்தைக்கு கொண்டுவந்தோம். ஆனால் இங்கு கேரட் கொள்முதல் விலை கடும் சரிவை சந்தித்து உள்ளது.
ஏற்கனவே விதை, உரம், தினக்கூலி மற்றும் போக்குவரத்துச் செலவுகள் கடுமையாக அதிகரித்து உள்ள நிலையில், சந்தையில் கேரட் விலை வீழ்ச்சி அடைந்து வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நாங்கள் வேறு வழியின்றி விற்பனைக்காக கொண்டு வந்த கேரட்டுகளை கால்நடைகளுக்கு தீவனமாக சாலையோரங்களில் கொட்டிவிட்டு செல்லும் இக்கட்டான நிலைமை ஏற்பட்டு உள்ளது.
எனவே இந்த விஷயத்தில் அரசாங்கம் தலையிட்டு ஊட்டி கேரட்டுக்கு நியாயமான கொள்முதல் விலையை நிர்ணயிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.