

தொடர் மழை காரணமாகவும் பக்தர்களின் பாதுகாப்பை கருதியும் இன்று காலை சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு வனத்துறை திடீர் தடை விதித்தது. இதையறியாமல் அங்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் அடி வாரத்தில் சூடம் ஏற்றிவிட்டு சாமி கும்பிட்டு சென்றனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் தலா 4 நாட்கள் வீதம் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்கள் மலையேறி சென்று தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்திருந்தது.
ஆனால் கடந்த 2 நாட்களாக விருதுநகர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சதுரகிரி கோவில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக அங்குள்ள சிற்றோடைகளில் அதிகளவு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது.
இன்று மழை குறைந்து பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று இரவு விருதுநகர், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை மாவட்டம் பேரையூர் ஆகிய பகுதிகளில் இடைவிடாது மழை கொட்டியது.
மேற்கு தொடர்ச்சி மலையில் இரவு முழுவதும் பெய்த மழை காரணமாக சதுரகிரிக்கு செல்லும் பாதையில் உள்ள வழுக்கு பாறை, மாங்கனி ஓடை, பிலாவடி கருப்பசாமி பகுதியில் உள்ள ஓடைகளில் அதிகளவில் நீர்வரத்து ஏற்பட்டது. மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் பட்சத்தில் மேற்கண்ட ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்படவும் வாய்ப்புண்டு.
தொடர் மழை காரணமாகவும் பக்தர்களின் பாதுகாப்பை கருதியும் இன்று காலை சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு வனத்துறை திடீர் தடை விதித்தது. இதையறியாமல் அங்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் அடி வாரத்தில் சூடம் ஏற்றிவிட்டு சாமி கும்பிட்டு சென்றனர்.