மதுக்கடையை மூடக்கோரினால் மக்களை கைது செய்வதா? - சீமான் கண்டனம்

கார்குடி அரசு மதுபானக் கடையை உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும்.
seeman
Published on: 

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகேயுள்ள கார்குடி ஊராட்சி, பாண்டிபஜார் கடைத்தெருவில் இயங்கிவரும் அரசு மதுபானக் கடை எண் 6457-ஐ நிரந்தரமாக மூடக்கோரி மக்கள் தொடர்ந்து போராடியும், அவர்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாமல் தமிழ்நாடு அரசு இழுத்தடித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது என நாதக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு நடுவில், காய்கறிச் சந்தை, கோவிலுக்கு அருகில் மதுக்கடையைத் திறந்து வைத்திருப்பது ஏன்? அத்தியாவசியப் பொருட்களை வாங்க வரும் மக்களும், சாலையில் பயணிப்போரும் மதுக்கடையால் ஏற்படும் இடையூறுகளைச் சகித்துக்கொண்டுதான் மக்கள் வாழ வேண்டுமா?

மக்கள் வாழும் இடத்தில் மதுக்கடையை வைத்துவிட்டு, அவர்கள் அமைதியாக வாழ வேண்டும் என்று கேட்டால் அதுவே அரசுக்குக் குற்றமாகிவிடுகிறதா? மக்களுக்காக அரசு நடத்துகிறீர்களா? மதுக்கடை நடத்துவதற்காக மக்களை ஆளுகிறீர்களா? இக்கடையை மூடுவது தொடர்பாக அரசு சார்பில் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, மூன்று முறை கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது

மூன்று காலக்கெடுக்கள் முடிந்தும் கடை அதே இடத்தில் இயங்குகிறது என்றால், அரசின் வாக்குறுதிக்கு என்ன மதிப்பு? அதிகாரிகள் அளித்த உறுதிமொழிக்கு யார் பொறுப்பு? கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத நிர்வாகத்திற்கு, மக்களிடம் மீண்டும் கால அவகாசம் கேட்க என்ன தகுதி இருக்கிறது?

பேச்சுவார்த்தை என்பது பிரச்சினைக்குத் தீர்வுகாணவா? போராடும் மக்களைக் கலைத்துவிட்டு மதுவிற்பனையைத் தொடரவா? மூன்று முறை ஏமாற்றப்பட்ட பிறகும் மக்கள் மௌனமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறதா அரசு? கடையை மூடக்கோரி கடந்த 18.10.2026 அன்று காலை 10 மணியளவில் போராடிய பொதுமக்கள் 80 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இன்று (16.11.2026) அனைத்துக் கட்சிகள் சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ள நிலையில், கார்குடி மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்புக்குப் பிறகும் மதுக்கடையைத் தொடர்ந்து நடத்துவதில் அரசு காட்டும் பிடிவாதம் எதற்காக? மக்களின் நிம்மதியைவிட மதுவிற்பனை வருவாய்தான் மேலானதா?

அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் போராடும் மக்களை கைது செய்வது என்ன நியாயம்? மது விற்பனைக்கு அரசின் பாதுகாப்பு! அதை எதிர்க்கும் மக்களுக்குக் கைது நடவடிக்கையா? இதுதான் மக்கள் நல ஆட்சியின் இலக்கணமா? வெட்கக்கேடு

எனவே, தமிழ்நாடு அரசு அரியலூர் மாவட்ட நிர்வாகமும் இனியும் காலம் கடத்தாமல், கார்குடி ஊராட்சி, பாண்டிபஜார் கடைத்தெருவில் இயங்கிவரும் அரசு மதுபானக் கடை எண் 6457-ஐ நிரந்தரமாக மூடுவதற்கான உத்தரவை உடனடியாக வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

என்று குறிப்பிட்டுள்ளார்.

X