தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கும், அதற்கான ஆணையத்தை அமைப்பதற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலை நிறுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் 47 ஆண்டுகால கனவாகும். தேசிய அளவிலும், மாநில அளவிலும் இதை சாத்தியமாக்குவதற்காக மருத்துவர் அய்யா அவர்களும், அவரது வழிகாட்டுதலில் நானும் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஏராளம்.
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பின்னர், கடந்த மே 11 ஆம் தேதி எனது இல்லத்திற்கு வந்து என்னை சந்தித்த முதலமைச்சர் விஜய் அவர்களிடம், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக சமூகநீதி சர்வே நடத்த வேண்டியதன் தேவையை வலியுறுத்தினேன்.
அதன் தொடர்ச்சியாக ஜூன் 5 ஆம் தேதி சென்னையில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, சமூகநீதி சர்வே எனும் சாதிவாரி சர்வேயை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினோம். தொடர்ந்து முதலமைச்சர் விஜய் அவர்களை ஜூன் 9 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் சந்தித்து, அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவுகளை விளக்கியதுடன், சமூகநீதி சர்வே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
அதை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் விஜய் அவர்கள், எங்களின் கொள்கையும் அது தான் என்று கூறி தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடத்தப்படும் என்று எனக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.
அதை நிறைவேற்றும் வகையில் ஆளுனர் உரையில் சமூக நீதி சர்வே நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு, அடுத்தக்கட்டமாக ஆணையம் அமைக்க ஒப்புதல் அளித்திருக்கிறது. தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக சமூகநீதி சர்வேயை நோக்கிய அரசின் பயணம் சரியான பாதையில் செல்கிறது என்பதை இன்றைய அமைச்சரவைக் கூட்ட முடிவு உணர்த்துகிறது.
என்று தெரிவித்துள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான ஆணையத்திற்கு சமூகநீதியில் அக்கறை கொண்ட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமிக்கவும், அடிப்படை ஆயத்த பணிகளை எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக முடித்து சமூகநீதி சர்வேயை அரசு தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
என்று தெரிவித்துள்ளார்.