நாடாளுமன்ற தேர்தலுக்கு குறி... 2027-ல் அரசியல் கட்சி தொடங்கும் அண்ணாமலை

ஏரி, குளங்கள், கால்வாய்கள் தூர்வாருதல், கடலோரம் தூய்மைப்படுத்துதல் போன்ற பணிகளை முன்னெடுத்தார்.
Annamalai
Published on
Summary

உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அடுத்த ஆண்டில் அண்ணாமலை புதிய கட்சியை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.

அண்ணாமலை

பா.ஜ.க.வில் இருந்து விலகிய அண்ணாமலை ‘வி த லீடர்ஸ்’ என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பின் மூலம் மக்கள் சேவையை அடிப்படையாக வைத்து போதையில்லா தமிழகம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிரான பிரசாரம், மதுவால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு பிரசாரங்களில் மக்களை ஈடுபடுத்தினார்.

அடுத்ததாக ஏரி, குளங்கள், கால்வாய்கள் தூர்வாருதல், கடலோரம் தூய்மைப்படுத்துதல் போன்ற பணிகளை முன்னெடுத்தார். இதில் கன்னியாகுமரியில் கடற்கரை தூய்மைப்படுத்துவதிலும், மதுரையில் வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணியிலும் அண்ணாமலையே நேரில் கலந்து கொண்டார்.

20 லட்சம் பேர்

அக்டோபர் மாதத்தை மகளிர் மாதமாகவும், நவம்பர் மாதத்தை இளைஞர் மாதமாகவும் மையப்படுத்தி பல்வேறு பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளார். அண்ணாமலையின் தலைமை ஏற்று ‘வி த லீடர்ஸ்’ அமைப்பில் 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளார்கள்.

உறுப்பினர்களாக சேரக் கூடியவர்கள் இணைய தளத்தில் உள்நுழைந்து பிறந்த தேதி, மொபைல் எண்ணை கொடுத்து ஓ.டி.பி. பெற்றுதான் உறுப்பினராக சேர முடியும். இது சாதாரண மக்களுக்கு கடினமாக இருப்பதால் ‘மிஸ்டு கால்’ கொடுத்து உறுப்பினராக சேரும் வசதி வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இதுபற்றி அண்ணாமலை விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளார். பல்வேறு பணிகள் மூலம் மக்கள் மத்தியில் அமைப்பை கொண்டு சேர்த்து விட்டதால் அடுத்தகட்டமாக அரசியல் கட்சி தொடங்கும் பணிகளை தொடங்கி உள்ளார்.

அரசியல் கட்சி

அமைப்பு பொது செயலாளராக கரு.நாகராஜனை நியமித்துள்ளார். மேலும் பல்வேறு பதவிகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அடுத்த ஆண்டில் (2027) புதிய கட்சியை தொடங்குவார் என்று கூறப்படுகிறது. 2029-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தான் தொடங்கும் கட்சியின் பலத்தை காட்டவும் திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். அதே நேரம் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களில் யாருக்கு ஆதரவு என்பது பற்றி அண்ணாமலை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com