

மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர், காங்கிரஸ் தலைவர் மற்றும் கர்நாடக முதலமைச்சர், காங்கிரஸ் தலைவர்களிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் வீத லீடர்ஸ் அமைப்பு தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திருச்செந்தூரில் நடைபெற்ற சூரசம்கார விழாவில் பங்கேற்க அறநிலையத்துறை சார்பாக பேச்சாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் வேல்முருகன் என்பவர் நேரலை ஒளிபரப்பில் முருகனுக்கு அரோகரா என்று சொல்வது போல, விஜய்க்கு அரோகரா அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷுக்கு அரோகரா என்று சொன்னது கண்டிக்கத்தக்கது.
இது முதல் முறையாக நடக்கிறது. இது மிகவும் தவறானது. இதில் சாதாரணமாக மன்னிப்பு கேட்டு கடந்து விட முடியாது. இதை முதல்வர் விஜய் கண்டிப்பது மட்டுமல்லாமல் இனி நடக்காமல் தடுக்க வேண்டும். அமைச்சர் ரமேஷ் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் சர்ச்சைக்குரிய மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுவதற்கு தேசிய மகளிர் கமிஷன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதும், ஏழு நாளுக்குள் டிஜிபி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
இதுகுறித்து தமிழக டிஜிபி கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.விடம் பேசி தான் ஆக வேண்டும். கள்ளக்குறிச்சியில்
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும்போது கலெக்டர் பேசவில்லை. அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வருகிறார்.
அவருடைய கணவரும் பக்கத்து மாவட்டத்தில் கலெக்டராக இருப்பவர். இந்த நிகழ்வு பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இதைக் குறித்து முதலமைச்சர், டிஜிபி, ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் அசோசியேசன் என யாருமே பேசவில்லை. தற்போது தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. இதற்கு பதில் அளிப்பார்களா அல்லது காலதாமதம் செய்வார்கள என்று பார்க்க வேண்டும். இந்த விவகாரம் நாளுக்கு நாள் மர்மத்தை ஏற்படுத்துகிறது. தமிழக மக்கள் நல்ல ஒரு பதிலை எதிர்பார்க்கிறார்கள்.
ஒரு புதிய அரசின் சிறப்பான செயல்பாடுகளுக்கு 365 நாட்கள் காத்திருக்க வேண்டும். ஆனாலும்
சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்திருக்க வேண்டும். இந்த ஆறு மாதத்தில் சட்ட ஒழுங்கு சிறப்பாக இல்லை.
மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு உரிமை இல்லை. இது குறித்து தமிழக முதலமைச்சர், காங்கிரஸ் தலைவர் மற்றும் கர்நாடக முதலமைச்சர், காங்கிரஸ் தலைவர்களிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகா அரசு காவேரி படுகையில் இருக்கும் 51 தாலுக்காவை வறட்சியான தாலுக்கா என்று அறிவித்துள்ளது. ஏன் அறிவித்தார் என்பதை தெரியவில்லை. இதை வைத்து கர்நாடக முதலமைச்சர் சிவக்குமார் அங்கு வறட்சி நிலவுவதால் தண்ணீரை தேக்கி வைக்கிறோம் என்கிறார். நீர் பங்கீடு குறித்து கர்நாடகா அரசு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். இதில் மத்திய அரசு தலையிட வேண்டும்.
கடந்த 2023 - 24 ஆம் ஆண்டு மத்திய நீர்வளத் துறை அமைச்சர் அணைக்கட்ட அனுமதி இல்லை என்றார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் அணை கட்டுவதற்கு அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார். மத்திய அரசும் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி உள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சியும் இதில் தேவையில்லாத வேலை செய்கிறார்கள். ஆதலால் தமிழக முதலமைச்சர் நம்முடைய தமிழகத்தின் உரிமையை மீட்க வேண்டும். அதற்கு அவர் கர்நாடக முதலமைச்சரிடம் பேச வேண்டும். பேசவில்லை என்றால் தவறாக அமைந்து விடும்.
முதல்வர் விஜய் புத்தக வெளியிடுவதற்கு மட்டும் சென்றேன் என்று கூறினால் தவறானது. அதனால் மேகதாது அணை விவகாரத்தை குறித்து கண்டிப்பாக காங்கிரஸ் தலைவர்களிடம் பேச வேண்டும்.
ஆந்திரா முதலமைச்சர் மசாலா குறித்து பேசினது எனக்கு தெளிவாக தெரியவில்லை. அதனால் தெரியாமல் பேசுவது சரியாக இருக்காது.
வி.த லீடர்ஸ் நிர்வாகிகள் களப்பணியில் சமூக சேவையாற்றி வருகின்றனர். மழைக்காலம் முடிந்தபின் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடத்த இருக்கிறோம். நான் அரசியல் பேசுகிறேன் ஆனால் வீ த லீடர்ஸ் அரசியல் கட்சி அல்ல. வருங்காலங்களில் அரசியல் கட்சியாக மாறும்போது போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.
தவெக அரசு குறித்து ஒரு வருட காலம் பின்பு முழுமையாக பேசுகிறேன். ஒவ்வொரு துறையில் அவர்கள் செய்தது என்ன என்பதை குறித்து வீ த லீடர்ஸ் சார்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.