

காவிரி நதிநீர் பிரச்சனை தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசுக்கும் முதல்வர் விஜய்க்கும் பல்வேறு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். காவிரி விவகாரத்தில் மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்குத் தேவையான அழுத்தத்தைக் கொடுக்கத் தமிழக முதல்வர் விஜய் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் விஜய் கூடுதல் அழுத்தம் தர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள இந்த அரசுக்குக் காவிரி விவகாரம் தொடர்பான நீண்டகால அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களில் போதிய அனுபவம் இல்லை என்று சுட்டிக்காட்டிய அன்புமணி, வெறும் அரசு அதிகாரிகளின் ஆலோசனைகளை மட்டுமே நம்பி முதல்வர் முடிவெடுக்கக்கூடாது எனக் குறிப்பிட்டார்.
அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது எனத் தடை விதிப்பதற்கு யாருக்கும் எந்தவித அதிகாரமும் இல்லை என்று தெரிவித்த அவர், நாட்டின் மற்றும் மாநிலத்தின் உரிமைசார்ந்த கோரிக்கைகளுக்காக இளைஞர்களும் மாணவர்களும் குரல் கொடுப்பதைக் தடுக்க முடியாது என்றார். மேலும், சொந்தமாக கார் இல்லாத மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அரசு உரிய வசதிகளையும் சலுகைகளையும் வழங்கிச் செயல்பட வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.