அன்பில் மகேஷ் ஜாமின் மனு: நவ.10-ந்தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

விஞ்ஞான ரீதியிலான ஊழல் என கூறியதற்கு அன்பில் மகேஷ் தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அன்பில் மகேஷ் ஜாமின் மனு: நவ.10-ந்தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு
Published on: 
Summary

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ரூ.400 கோடி லஞ்ச வழக்கில் தொடரப்பட்ட ஜாமின் மனு விசாரணை முடிவில், தீர்ப்பை நவம்பர் 10-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இரு தரப்பின் வாதங்களும் மூன்றரை மணி நேரம் நீடித்தன.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.400 கோடி லஞ்ச வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமின் கேட்டு அவர் தாக்கல் செய்துள்ள மனு லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நீதிபதி சத்திய மூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அன்பில் மகேஷ் தரப்பில் மூத்த வக்கீல் அபுடுகுமார் ஆஜராகி, ‘‘அன்பில் மகேஷ் வீட்டில் கடந்த செப்டம்பர் 16-ந்தேதி போலீசார் சோதனை நடத்தினர். நேரிலும் அவர் போலீஸ் முன்பு விசாரணைக்கு ஆஜரானார். தற்போது 3 நாட்கள் காவலில் வைத்து விசாரித்தபோது, போலீசாரின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார். போலீசார் விசாரணைக்கு தேவைப்படும் அனைத்து ஆவணங்களும் கொடுக்கப்பட்டு விட்டன. அன்பில் மகேஷை செல்வாக்கான நபர் என்று போலீசார் கூறினாலும், அவர் எங்கும் தப்பிச் செல்ல போவது இல்லை.

அதிகாரிகள், அரசியல்வாதிகளின் பெயரைச் சொல்லி தனியார் பள்ளிகளிடம் அரசகுமார் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளார். ஆனால், பள்ளிகளுக்கு அனுமதி வாங்கித் தராமல் மோசடி செய்துள்ளார். பணம் கொடுத்ததை வெளியில் சொன்னால் பள்ளிகளை இயங்க அனுமதிக்க முடியாது என்று மிரட்டியதாகவும் புகார் உள்ளது. அவர் வசூலித்த பணத்துக்கு மனுதாரர் பொறுப்பாக முடியாது. லஞ்ச வழக்குகளை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீஸ் இருக்கும்போது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வழக்கை விசாரிக்கின்றனர். புதிய நடைமுறையை போலீசார் அறிமுகம் செய்துள்ளனர். விலைவாசி ஏறுவதைப் போல ரூ.100 கோடி லஞ்சம் என்பது தற்போது ரூ.400 கோடி என்று உயர்ந்துள்ளது. இவ்வளவுப் பெரிய தொகையை புகார்தாரர்கள் எப்படி கொடுத்தனர்? இந்த பணம் எங்கிருந்து வந்தது? என்ற கேள்வி குறித்து போலீசார் விசாரிக்கவில்லை. லஞ்சம் கொடுத்தவர்களுக்கு போலீசார் சட்ட ரீதியாக பாதுகாப்பு வழங்குகின்றனர். புகார்தாரர்கள் அரசகுமாரிடமும், இளங்கோவனிடமும்தான் பணத்தைக் கொடுத்துள்ளனர் என்று வாதாடினார்.

விஞ்ஞான ஊழல்

அதனை தொடர்ந்து காவல்துறை தரப்பு வாதம் சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கியது. தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் காவல்துறை சார்பில் வாதத்தை முன்வைத்தார். அப்போது, முத்துக்குமாரும் அன்பில் மகேஷும் மிகவும் நெருக்கமானவர்கள். அரசகுமார், முத்துக்குமாருடன் சேர்ந்து தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கத்தை நடத்தினர்.

அங்கீகாரம் கோரும் பள்ளிகளை தேர்ந்தெடுத்து அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக்கூறி பணம் வசூலித்துள்ளனர். ஆரம்பத்தில் முன்னாள் அமைச்சர் தொடர்பு குறித்து பள்ளி உரிமையாளர்களான புகார்தாரர்களுக்கு தெரியாது. அன்பில் மகேஷ் மீதான வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டதல்ல.

அன்பில் மகேஷ் கைதான 2 நாள்களில் முத்துக்குமார் சரணடைந்தார். அவருக்கு அடைக்கலம் கொடுத்தது அன்பில் மகேஷ் தான். தனியார் பள்ளிகளிடம் அன்பில் மகேசுக்காக பணம் வசூலித்து கொடுத்தது முத்துக்குமார் தான்.

அன்பில் மகேஷ் வீட்டிற்கு சரவணன் என்பவர் பணத்தை எடுத்து சென்ற வீடியோ ஆதாரம் உள்ளது. விஞ்ஞான ரீதியிலான ஊழல். அது பல ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது. அன்பில் மகேஷுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

விஞ்ஞான ரீதியிலான ஊழல் என கூறியதற்கு அன்பில் மகேஷ் தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இவ்வாறு இரு தரப்பு வாதங்களும் நடைபெற்ற நிலையில், அன்பில் மகேஷ் ஜாமின் கோரிய மனு மீதான தீர்ப்பை வருகிற 10-ந்தேதி நீதிபதி ஒத்திவைத்தார். கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X