நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலையில் பெய்த திடீர் கனமழை காரணமாக, விவசாயிகள் அறுவடை செய்து விற்பனைக்காகக் குவித்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மற்றும் நெல்மணிகள் மழைநீரில் நனைந்து சேதமடைந்துள்ளன.
இதனால் தங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான அயன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி, வைராவி குளம், தெற்கு பாப்பாங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் அறுவடை செய்த நெல்மணிகளை வீடுகளின் முன்பும், சாலைகளிலும் குவித்து வைத்திருந்தனர்.
இந்த நிலையில், நேற்று மாலை நேரத்தில் இப்பகுதிகளில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த எதிர்பாராத மழையினால், சாலைகளிலும் வீடுகளின் முன்பும் திறந்தவெளியில் கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் அனைத்தும் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டும், நனைந்தும் சேதமடைந்தன.
அதேபோல், அரசு நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளால் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டு, அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளும் இந்த திடீர் மழையில் சிக்கி நனைந்துள்ளன. முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் நெல் மூட்டைகள் அனைத்தும் மழைநீரில் ஊறியுள்ளன.
கடினமாக உழைத்து, அறுவடை செய்து விற்பனைக்குக் கொண்டு வந்த நெல்மணிகள் அனைத்தும் இப்படி மழைநீரில் நனைந்து பாழாகிக் கொண்டிருப்பதைப் பார்த்து விவசாயிகள் மிகுந்த கவலையும் வேதனையும் அடைந்துள்ளனர்.
ஏற்கனவே நனைந்துள்ள நெல்மணிகள், தொடர்ந்து மழை பெய்தால் காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக முளைத்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெல்மணிகள் முளைத்துவிட்டால் அவற்றை அரசு கொள்முதல் செய்யாது என்பதால் விவசாயிகளுக்குப் பலத்த பொருளாதார இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நெல் கொள்முதல் நிலையங்களை விரைவாகத் திறந்து, நெல் மூட்டைகளைத் தாமதமின்றி கொள்முதல் செய்ய வேண்டும் எனப் பாதிப்படைந்த விவசாயிகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.