கோவை மாணவன் அகிலன் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்

நீதிபதி சந்துரு ஆணையத்தின் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
கோவை மாணவன் அகிலன் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்
Published on: 

கோவை பீளமேட்டில் 11ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைதுசெய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;

கோவை -பீளமேட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியைச் சார்ந்த பதினோராம் வகுப்பு மாணவன் அகிலன் சாதிய வன்கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியும் வேதனையுமளிக்கிறது.

கடந்த சிலநாட்களுக்கு முன்னர், கல்வி உதவித் தொகை பெறும் பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடியின மாணவர்களை எழுந்து நிற்குமாறு ஆசிரியர் விஜயகுமார் கூறியுள்ளார்.

அப்போது அகிலன் உள்ளிட்ட சில தலித் மாணவர்கள் எழுந்து நின்ற போது, "நீங்கள் மாட்டுக்கறி சாப்பிடுபவர்களா?" என அந்த ஆசிரியர் கேட்டதாகவும்; அதற்கு ஆமாம் நாங்கள் சாப்பிடுவோம் என அகிலன் கூறியதாகவும் தெரிகிறது.

அதிலிருந்து சக மாணவர்கள் சிலர் அகிலனைச் சாதியைச் சொல்லி இழிவுப்படுத்தினரென்றும் அகிலனுடன் பிற மாணவர்கள் பேசுவதைத் தவிர்த்தனரென்றும் தெரியவருகிறது.

இதனைப் பள்ளி நூலகரிடம் அகிலன் தெரிவித்தன் அடிப்படையில் நூலகரும் இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளார். அப்போதே பள்ளித் தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவன் அகிலனை தற்கொலையிலிருந்து காப்பாற்றியிருக்கலாம்.

எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து சாதிய வன்கொடுமைகளுக்கு அகிலன் ஆளாகியுள்ளார். இந்நிலையில் , கடும் மனஉளைச்சலில் இருந்த மாணவன் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார்.

மாணவன் அகிலனின் பெற்றோரின் போராட்டத்துக்கு பின்னர் தலைமை ஆசிரியர் அருண்குமார் , ஆசிரியர் விஜயகுமார் மற்றும் மாணவர்கள் இருவர் என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாரும் கைதுசெய்யப்படவில்லை.

மாணவன் அகிலனின் தற்கொலைக்கு காரணமாக இருந்த அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

பள்ளிகளில் நிலவும் சாதிய பாகுபாடுகளை போக்குவதற்கான வழிமுறைகளை கண்டறிவதற்காக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி சந்துரு ஆணைய அறிக்கையை தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் நடைமுறைபடுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம்!

ஆசிரியர்களுக்கு சமூகநீதி குறித்தும் சாதி ஒழிப்பு குறித்தும் சிறப்பு பயிற்சி வழங்கிட வேண்டுமென்றும்; சமூகநீதி குறித்த பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டுமென்றும்; தற்போது கேரளாவில் நடைமுறையில் இருப்பது போல் 'சமூகநீதி மாணவர் படையை' பள்ளிகள் தோறும் ஏற்படுத்திட வேண்டுமென்றும் நீதிபதி சந்துரு ஆணையத்தின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

எனவே, அந்த அறிக்கையை நடைமுறைப்படுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com