தேனி சம்பவம் எதிரொலி: சிறைத்துறை பாதுகாப்புக்கு ஆசோலனை வழங்க முன்னாள் டி.ஜி.பி. தலைமையில் உயர்நிலைக் குழு!

தேனி சம்பவத்தால், டிஜிபி ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
தேனி சம்பவம் எதிரொலி: சிறைத்துறை பாதுகாப்புக்கு ஆசோலனை வழங்க முன்னாள் டி.ஜி.பி. தலைமையில் உயர்நிலைக் குழு!
Published on: 

தேனி தேக்கம்பட்டி கிளைச் சிறையில் இருந்து கைதிகள் தப்பிய சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் சிறைச் சாலைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துதல் தொடர்பான பரிந்துரைகளை அரசுக்கு வழங்க முன்னாள் டி.ஜி.பி. திரிபாதி தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் சிறைத்துறை இயக்குநர்களான ஏடிஜிபி சங்கர், முன்னாள் டிஐஜி ராஜேந்திரன் ஆகியோர் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சிறைகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள் தொடர்பாக இக்குழு அறிக்கை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு காரணமான சிறை அலுவலர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

தேனி சம்பவம்

தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள், அக்.26 அன்று இரவு சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

இந்த சம்பவத்திற்கு மனித தவறே காரணம் என தெரியவந்தநிலையில், தலைமைக் காவலர்கள் உள்ளிட்ட 9 சிறைக்காவலர்களை பணியிடை நீக்கம் செய்து சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டிருந்தார்.

மேலும் இனி கைதிகள் காவலர்களை தாக்கிவிட்டு தப்பினால், அவர்களை துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கலாம் என உத்தரவும் பிறப்பித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து சந்தீப் ராய் ரத்தோரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஏடிஜிபி சங்கர் சிறைத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

அனைவரும் கைது

தப்பிய 17 பேரும் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் சமீபத்தில் சென்னை புழல் சிறையிலும், அதைத் தொடர்ந்து தேனி மாவட்ட சிறையிலும் கைதிகள் தப்பியோடிய சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறியதால் சிறைத்துறையின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

இச்சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் பாதுகாப்பு குறித்து ஆலோசனைகள் வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

X