வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்- அமைச்சர் நிர்மல்குமார்

வழக்கறிஞர்கள் சேமநல நிதியை 10 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.
Minister Nirmal Kumar
Published on: 
Summary

2027 பொங்கலுக்குள் தேவையான மாவட்டங்களில் POCSO மற்றும் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவிப்பு.

ஈரோடு அருகே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் எழுச்சி மாநாடு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

புதிய நிர்வாகிகள் தேர்வு

இம்மாநாட்டில் கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள் முறைப்படி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர். அதன்படி, கூட்டமைப்பின் தலைவராக கரூர் வழக்கறிஞர் மாரப்பன், கவுரவத் தலைவராக தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான எஸ்.பிரபாகரன், பொதுச்செயலாளராக அய்யாவு ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் கதிரவன், துணைத்தலைவர் பாலமுருகன், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் அமல்ராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

மாநாட்டில் வழக்கறிஞர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

* வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றி அமல்படுத்த வேண்டும்.

* வழக்கறிஞர்கள் சேமநல நிதியை 10 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.

* வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

* தகுதியுள்ள வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

* கீழமை நீதிமன்றங்களில் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

கூட்டத்தில் பேசிய கவுரவத் தலைவர் எஸ்.பிரபாகரன், வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என்றும், சேமநல நிதி உயர்வு மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், வழக்கறிஞர்களின் கோரிக்கைகள் குறித்துப் பேசுகையில்: அரசியலைக் கடந்து வழக்கறிஞர்கள் மற்றும் அரசின் நலனுக்காகவே தாம் நிகழ்வில் பங்கேற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், வழக்கறிஞர்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் தாம் நன்கு அறிந்து வைத்துள்ளதாகத் தெரிவித்தார். முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற்று விரைவில் ‘வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம்’ கொண்டுவரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

மேலும், வரும் 2027 பொங்கல் பண்டிகைக்குள் தேவையான மாவட்டங்களில் POCSO மற்றும் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும், கீழமை நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்றும் கூறினார். வழக்கறிஞர்கள் சேமநல நிதியை உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், மருத்துவக் காப்பீடு வழங்குவது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com