

நெல்லையில் நடிகை திரிஷாவின் பெயரில் 'இளைய புரட்சித்தலைவி' பேரவை தொடங்கப்பட்டுள்ளது. திரிஷாவின் ஆளுமை ஜெயலலிதாவை ஒத்ததாக இருப்பதால், அவர் அரசியலில் ஈடுபட வேண்டும் என இயக்கம் வலியுறுத்துகிறது. மக்கள் நல பணிகள் மூலம் திரிஷா, முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து தமிழக வளர்ச்சிக்கு உதவுவார் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சமீப காலமாக நடிகர்களின் பெயரில் அவர்களது ரசிகர்கள் நற்பணி மன்றத்தை தொடங்குவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் நற்பணி இயக்கத்தை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் நெல்லையை தலைமையிடமாக கொண்டு நடிகை திரிஷாவின் பெயரில் நற்பணி இயக்கத்தை நெல்லையை சேர்ந்த ராஜகோபால் என்பவர் இன்று தொடங்கி உள்ளார். தொடர்ந்து அவர் இயக்கத்தின் பெயர் மற்றும் லோகோவை வெளியிட்டார். ‘இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை’ என்று புதிய இயக்கத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
லோகோவில் நடிகை திரிஷா கும்பிட்டபடி நிற்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இந்த நற்பணி இயக்கத்தை தொடங்கி உள்ள ராஜகோபால், ஏற்கெனவே அரசியல் அனுபவம் கொண்டவர்.
கடந்த 1996 முதல் 1998-ம் ஆண்டு காலகட்டத்தில் ம.தி.மு.க.வில் தச்சநல்லூர் பகுதி வட்ட செயலாளராக இவர் பணியாற்றியுள்ளார். பின்னர் பா.ஜ.க-வில் தச்சநல்லூர் மண்டல நிர்வாகியாகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார். தற்போது எந்தவொரு அரசியல் கட்சியிலும் இல்லை என்று தெரிவித்துள்ள அவர், நடிகை திரிஷாவின் தீவிர ரசிகர் என்பதால், சினிமாவை கடந்து திரிஷா பொதுவாழ்விலும், அரசியலிலும் ஈடுபட வேண்டும் என்று விருப்பம் கொண்டு இந்த இயக்கத்தை தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜகோபால் மேலும் கூறியதாவது:-
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் நடக்கக்கூடிய அனைத்து தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார். ஜெயலலிதாவின் ஆளுமையை பார்த்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் தங்கள் கடமையை சரியாக செய்தார்கள். கடமை தவறிய அதிகாரிகளை ஜெயலலிதா விட்டு வைக்கவில்லை.
அவர்கள் தாங்கள் செய்த தவறை உணரும் வகையில் அவர்களை மிக டம்மியான பதவியில் நியமித்து தண்டனை வழங்கினார். தமிழகத்தை பொறுத்தமட்டில் ஜெயலலிதா போன்று ஒரு ஆளுமை தேவைப்படுகிறது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு மிக சிறப்பாக செயல்படுகிறது. இருந்தாலும் விஜய்யுடன் இணைந்து திரிஷாவும் அரசியலில் பயணித்தால் ஜெயலலிதா ஆட்சியை போன்று ஒரு ஆட்சி நமக்கு கிடைக்கும். ஜெயலலிதாவை போன்று ஒரு ஆளுமை திரிஷாவுக்கு உள்ளது. அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு தான் இது தெரியும்.
அவரது ஆளுமையை நாங்கள் பல இடங்களில் பார்த்துள்ளோம். ஆளுமை என்ற அடிப்படையில் ஜெயலலிதாவின் வழித்தோன்றலாக திரிஷாவை நாங்கள் பார்ப்பதால் அவருக்கு இளைய புரட்சித்தலைவி என்ற பட்டத்தை சூட்டி உள்ளோம். அவரது அரசியல் பயணம் தமிழகத்துக்கு தேவைப்படுகிறது. இந்த பேரவை மூலம் மக்கள் நல பணிகளை செய்ய உள்ளோம். எங்களது மக்கள் நல பணிகள் மூலம் திரிஷா, முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து அரசியல் பயணத்தை மேற்கொள்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அவ்வாறு இருவரும் இணைந்து அரசியலில் பயணிக்கும் போது தமிழகத்தின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, இந்த அமைப்பு திரிஷாவின் ஒப்புதலுடன் தொடங்கப்படுகிறதா? என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.