

கடந்த 4 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் கட்டப்படும் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுகா நகரம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மகன் பசுபதி (50). இவர் பண்ருட்டியில் இருந்து சென்னைக்கு ஈச்சர் லாரியில் தனியார் கம்பெனியில் இருந்து பிராய்லர் கோழி லோடு ஏற்றி சென்று கொண்டிருந்தார்.
அப்போது லாரி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்துள்ள ஜக்கம்பேட்டை நீதிமன்ற வளாகம் முன்பு வந்த போது அங்கு 4 வருடங்களாக ஆமை வேதத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் மேம்பால பணிக்காக தற்காலிகமாக வாகனங்கள் செல்ல சர்வீஸ் சாலை ஒன்றை அமைத்துள்ளனர்.
இரவு நேரத்தில் சர்வீஸ் சாலை சரியாக தெரியாததால் மேம்பால வேலை நடைபெறும் வழியில் நேராக சென்ற லாரி வழியில் மேம்பால பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஹிட்டாச்சி வாகனத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் லாரி டிரைவர் பசுபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் லாரியில் சென்ற லோடுமேன்கள் காவடி, மேட்டு தெருவை சேர்ந்த கஜேந்திரன் மகன் பரத் (21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராமதாஸ் மகன் ரவினேஷ் (19) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் பலியான டிரைவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜக்கம்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் முன்பு புதிதாக பாலம் கட்டப்படும் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் எச்சரிக்கை விளக்குகள் வைக்காததால் இரவு நேரங்களில் சர்வீஸ் ரோடு எது என்று தெரியாமல் மேம்பாலத்தின் மீது வாகனங்கள் சென்று விபத்துக்குள்ளாகி அப்பாவி உயிர்கள் பலியாகி வருகின்றன.
எனவே உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகள் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மேலும் கடந்த 4 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் கட்டப்படும் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.